Suseenthiran

Advertisment

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, பத்தாயிரத்திற்கும்கீழ் பதிவாகிவருகிறது. இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள தமிழ்நாடுஅரசிற்கு பெரிய அளவில் நிதித்தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியளித்து உதவுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி திரட்ட இயக்குநர் சுசீந்திரன் புதிய முயற்சியை கையில் எடுத்தார்.

நடிப்பு மற்றும் இயக்கம் பற்றி 10 நாட்கள் கட்டண ஆன்லைன் வகுப்பு நடத்தி, அதில் கிடைக்கும் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாக சுசீந்திரன் அறிவித்தார். ஜூன் 14ஆம் தேதி தொடங்கிய இந்த கட்டண ஆன்லைன் வகுப்பில் பலரும் கலந்துகொண்டனர். இதன் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 5 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு இயக்குநர் சுசீந்திரன் அளித்துள்ளார். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த சுசீந்திரன், அதற்கான காசோலையை அவரிடம் வழங்கினார். சுசீந்திரனின் இந்தச் செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.