லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’. இப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமல்லாமல் தயாரித்து இசையமைத்தும் உள்ளார். இப்படத்தில் அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இபப்டம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் சுசீந்திரனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது விமர்சனம் குறித்து பேசிய அவர், “மார்கன் படத்திற்கும் டிஎன்ஏ படத்திற்கும் முதல் இரண்டு நாளில் பாசிட்டிவ் விமர்சனங்களே வரவில்லை. சில விமர்சனங்கள் வருத்தத்தை தந்தது. ஆனால் படத்தை பார்த்தால் நன்றாக இருந்தது.
எல்லா யூட்யூபர்ஸும் உங்க சேனலின் பார்வையாளர்களுக்கு உண்மையாக இருங்க. இப்போது தமிழ் சினிமாவில் போதை கலாச்சாரம் அதிகம் பேசப்பட்டு வருது. ஆனால் அது ரொம்ப நாள் நடந்துகிட்டு இருக்கு. இப்போது வெளியுலகத்திற்கு தெரிய வருது. அதே போல் யூட்யூபில் பணம் வாங்கிவிட்டு ரிவ்யூ பண்ணும் கலாச்சாரம் ரொம்ப நாளாக நடந்திட்டு இருக்கு. அது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. அது அவங்க சேனலின் பார்வையாளர்களுக்கு துரோகம் செய்யுற மாதிரி. அதனால் தயவு செஞ்சு அது மாதிரி பண்ணாதீங்க. உங்களுக்கு உண்மையா என்ன தோணுதோ அதை பண்ணுங்க. இதை நான் பேசுவதால் கூட சில யூட்யூபர்ஸுக்கு என் மேல் கோபம் வரும். நீ என்ன யோக்கியமா என கேட்பார்கள். ஆமாம் நான் யோக்கியம் தான். என்னுடைய தயாரிப்பாளருக்கு நான் உண்மையா படம் பன்றேன். அது நம்ம செய்யுற வேலைக்கு உண்மையா இருக்கனும் என்பதுதான்.
சில தயாரிப்பாளர்கள் படத்தை வெற்றியாக்க சில விஷயங்களை செய்றாங்க. அதுவும் செய்யக் கூடாது. சில யூட்யூபர்ஸே ஒரு 10 பேரை உள்ளே அனுப்பிவச்சிட்டு ரிவ்யூ சொல்ல வைக்கிறாங்க. அவன் படம் கூட பார்த்திருக்க மாட்டான். ஆனால் ரிவ்யூ கொடுப்பான். மக்கள் அதிகம் பார்குறாங்க என்பதற்காக நெகட்டிவ் ரிவ்யூ கொடுக்கிறான். அது நிறைய பேரிடம் ரீச் ஆகுது. மக்கள் எதை பார்க்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அவர்களின் பார்வையை நாம் மாத்த வேண்டும். அதுமாதிரியான ஒரு பொறுப்பான இடத்தில் நாம் இருக்கிறோம். அதனால் ஒரு படத்தை கொலை செய்யுற மாதிரி விஷயங்களை பண்ணாதீங்க. அது நம்மள நாமலே கொலை செய்வது போல. இப்போது கண்ணப்பா படக்குழு யூட்யூபர்ஸ் யாரும் ரிவ்யூ பண்ணக்கூடாதுன்னு ஸ்டே ஆர்டர் வாங்கியிருக்காங்க. அந்தளவு நிலைமை இருக்கு. இதனால் யூட்யூபர்ஸ் ரிவ்யூவும் பண்ண முடியாம போகுது. அதனால் தயாரிப்பாளர் பாதிக்காத அளவிற்கு ரிவ்யூ பண்ணுங்க” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.