suseenthiran about kanguva

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த கங்குவா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பதானி மற்றும் பாபி தியோல் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, கே.எஸ் ரவிகுமார், கருணாஸ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 2டி மற்றும் 3டியில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக படம் முழுக்க அதிக சத்தம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனம் தொடர்பாக ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, “பார்வையாளர்கள் தலை வலியுடன் வெளியேறினால், எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது” என தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக எழுந்த விமர்சனத்திற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, திரையரங்க உரிமையளர்களுக்கு சத்தத்தின் அளவை 2 புள்ளிகள் குறைக்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஜோதிகா, கங்குவா திரைப்படத்தில் உள்ள நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது ஏன் என்றும் படத்தைப் பற்றி வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். இதுவும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இருப்பினும் படம் 3 நாளில் உலகம் முழுவதும் 127.64 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்திற்கு எழுந்த விமர்சனம் குறித்து திரை பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசாமி, சூர்யா மீது தனிப்பட்ட அவதூறு பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்திருந்தார். பின்பு நந்தன் பட இயக்குநர் இரா.சரவணன், ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்குக் கொந்தளிக்கும் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, சுரண்டல்களை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கடக்கிறோம் என பல்வேறு கேள்விகளை அடுக்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடிருந்தார்.

suseenthiran about kanguva

இவர்களைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுசீந்திரன், “நேற்று மாலை என் குழந்தைகளுடன் கங்குவா திரைப்படத்தை பார்த்தேன், தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரமாண்டமான திரைப்படம் இது, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்துள்ளார் சிவா இயக்குனர், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். சூர்யாவின் நடிப்பு, உழைப்பு பிரமிக்க வைக்கிறது, கேமரா, சி.ஜி. என அனைத்து துறைகளிலும் உலகதரத்துக்கு தமிழில் இந்த கங்குவா, தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள், காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள், அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த திரைப்படத்தை பாருங்கள். கங்குவா உங்களை மகிழ்விப்பான்” என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வீடியோ மூலம் பேசிய அவர், “தெலுங்கில் பாகுபலி படம் எப்படி பிரம்மாண்டமான திரைப்படமோ அது மாதிரியாக தமிழில் கங்குவா படம். இந்தப் படத்திற்கு எதற்காக தவறான கருத்துகளை பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை” என்றார்.

Advertisment