/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Surya_2.jpg)
நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத்தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
சூர்யா பேசியதாவது, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசு அவ்ளோ கஷ்டமாயிருக்கு. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தரவில்லை. பெரியண்ணா படம் அவரோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நாளும் சகோதர அன்போடு இருப்பாரு, அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடுவதில்லை, அப்ப அவர் ஒரு வார்த்தையை உரிமையா சொல்லி ஏன் சைவம் சாப்பிடுறேன்னு திட்டி அவருடைய தட்டிலிருந்து எடுத்து சாப்ட வச்சாரு, நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும்னு ஊட்டிவிடுவாரு”
“அவரோட நடிச்ச நாட்களில் பிரமிச்சு பார்த்தேன். அவரை இலகுவாக அனைவரும் அணுகலாம். கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது அவருடைய உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மாதிரி யாரும் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகம் பார்க்க முடியாதது என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சிக்காரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.விஜயகாந்த் இறந்தபோதே சூர்யா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரதுஉருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)