Advertisment

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன செய்வார்கள்? எப்படி நீட் எழுதச் சொல்வீர்கள்? இது எப்படி சரியாகும்?- கொதித்தெழுந்த சூர்யா 

இன்று சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 40ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசுகையில்,

Advertisment

surya speech about neet

''30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? ஏன் நாம் அத்தனை பேரும் வரைவு அறிக்கை குறித்து பேசவில்லை? குரல் எழுப்பியவர்களுக்கு நன்றி தெரித்துக்கொள்கிறேன். இதுதான் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றப் போகிறது. கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. கிராமப்புறப் பள்ளிகள், ஏழை மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. கல்விக் கொள்கையின் குழு, ஓராசிரியர் அல்லது 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதுபோல 1,848 பள்ளிகள் உள்ளன. அந்த மாணவர்கள் எங்கே செல்வார்கள்? நான் சென்னையில் படிக்கும் மாணவர்களை பற்றி பேசவில்லை. பஸ் வசதி கூட இல்லாத மாணவர்கள், பழங்குடி மாணவர்களின் ஆரம்பகாலப் பள்ளி வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது? இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்பார்கள். கிட்டத்தட்ட 50% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கிராமங்களில் படிப்பவர்களே.

மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். 3, 5, 8 ஆவது வகுப்புகளில் பொதுத் தேர்வாம். வளர்ந்த நாடுகளில் 8ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லை. இந்திய அளவில் 95% பேர் ஆரம்பக் கல்வியைப் படிக்கிறார்கள் எனில், அதில் 55% பேர் மட்டுமே 11ஆம் வகுப்பு சேர்கிறார்கள். 6.5 கோடி மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. 30% மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமலேயே படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி நீட் எழுதச் சொல்வீர்கள்? ஏகப்பட்ட பொதுத் தேர்வுகளைத் தாண்டி, ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வரும். அதை எழுதினால்தான் நீங்கள் டிகிரி படிக்கமுடியும்.

Advertisment

கடந்த முறை 1,80,000 அரசுப்பள்ளி மாணவர்களில் ஒருவரால் மட்டுமே நீட்டில் தேர்ச்சி பெற முடிந்தது. நீட் தாண்டி மற்ற எல்லா டிகிரிகளுக்குமே இந்த நுழைவுத் தேர்வு வரப்போகிறது. இது ஆரம்பிப்பதற்கு முன்னாலே, கோச்சிங் சென்டர்களின் வருமானம் ரூ.5,000 கோடி என்கிறார்கள். இனியும் அவை காளான்கள் போல நிறைய முளைக்கும். இந்த நிலையில் அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன செய்வார்கள்? நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள், 12 ஆயிரம் கல்லூரிகளாகக் குறைக்கப்படும் என்கிறார்கள். இதிலிருந்து கிராமப் புறக் கல்லூரிகள் மூடப்படுமோ என்ற கேள்வி எழுகிறது. அவர்களுக்கு மீண்டும் தடை, தடை. இது ஏன் என்று யாருக்குமே விழிப்புணர்வு ஏற்படவில்லை. இது அகரம் அறக்கட்டளையில் இருந்து உங்கள் அனைவருக்குமான கேள்வி.

இந்தியாவில் கிட்டத்தட்ட 80 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் ஒரேயொரு ஆசிரியர் அமைப்பிடமும் ஒரேயொரு மாணவர் அமைப்பிடமும் மட்டுமே கல்விக் கொள்கைக் குழுவுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. இது எப்படி சரியாகும்?கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என்று சூர்யா கூறியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கை பற்றி மத்திய அரசு அறிக்கையை வெளியிட்டபோதே நடிகர் சூர்யா இதைப்பற்றி பெற்றோர்கள், மாணவர்கள் என்று அனைவருமே பேச வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவருடைய அறக்கட்டளை நிகழ்ச்சியில் அதுகுறித்து விலாவாரியாக பேசிவிட்டார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe