விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி முதல் முறையாக ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் திரைப்படம் பீனிக்ஸ். இதே படம் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கும் அனல் அரசு இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர்கள் இருவரும் தங்களது புது அவதராத்தில் வென்றார்களா இல்லையா? 

Advertisment

தனது அண்ணனை திட்டமிட்டு கொலை செய்த எம்.எல்.ஏ-வை பட்டப்பகலில் நடுவீதியில் வைத்து கொலை செய்து விட்டு கோர்ட் உத்தரவுப்படி சிறார் ஜெயிலான கூர்நோக்கு இல்லத்துக்கு செல்கிறார் சூர்யா சேதுபதி. உள்ளே சென்ற அவரை ஜெயிலுக்குள்ளேயே வைத்து கொலை செய்ய வண்டி வண்டியாக ஆட்களை உள்ளே அனுப்புகிறார் எம்.எல்.ஏ-வின் மனைவி வரலட்சுமி சரத்குமார். உள்ளே போகும் கூலிப்படைகளால் சூர்யா சேதுபதி கொல்லப்பட்டாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

Advertisment

477

சூர்யா சேதுபதி அறிமுகம் என்பதால் ஆடல் பாடல் என கமர்சியல் விஷயங்கள் எதையும் வைக்காமல் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளை முக்கிய அம்சமாக வைத்து வடசென்னை பின்னணியில் ரசிக்க வைக்கும் ஒரு கேங்ஸ்டர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் அனல் அரசு. இவர் பெயரில் இருக்கும் அனல், படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் தெரிகிறது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை தனது ஆக்ஷன் கோரியாகிராபி மூலம் படம் முழுவதையும் தெறிக்க விட்டுள்ளார். இதற்கு நடுவே அம்மா மகன் பாசம், அண்ணன், காதல், ஏமாற்றம் பழிவாங்கல் என வழக்கமான ரூட்டையும் தொட்டுள்ளார். இருப்பினும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அதிரடி நிறைந்த திருப்பங்களாகவும் இருக்கிறது. இதனால் படம் சூடு பிடிக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகள் அனைத்துமே எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு அதுவே படத்திற்கு பக்கபலமாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. தன் முதல் படத்திலேயே அனல் அரசு, தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். 

478

நாயகனாக வரும் சூர்யா சேதுபதி அதிகம் பேசவில்லை. ஆனால் அவரது ஆக்ஷன் அதிகம் பேசுகிறது. ஒவ்வொரு சண்டைக் காட்சிகளிலும் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு தேர்ந்த பைட்டர் போல், தன்னை கொல்ல வரும் எதிரிகளை துவம்சம் செய்து விடுகிறார். படத்தில் இவருக்கு பெரிதாக வசனங்கள் இல்லை வெறும் ஆக்ஷன் காட்சிகள் மட்டும் தான். அதை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். இவரது அண்ணன் காக்கா முட்டை விக்னேஷ் மற்றும் அபி நட்சத்திரா இருவருக்குமான காதல் காட்சிகள் நிறைவாக அமைந்திருக்கிறது. இருவரும் அவரவருக்கான வேலையை நல்லபடியாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர்.

Advertisment

அம்மா தேவதர்ஷினி வழக்கம்போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எம்.எல்.ஏ. சம்பத் வழக்கமான வில்லத்தனம் காட்டியிருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். குறிப்பாக வடசென்னை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நல்ல நடிப்பை கொடுத்து படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறார்கள். 

475

வழக்கம்போல் சாம் சி.எஸ். பின்னணி இசை காதை கிழிக்கிறது. இருந்தாலும் அந்த சத்தமான இசை கூட படத்திற்கு பல இடங்களில் பக்கபலமாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வாசித்து தள்ளி இருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகள் மிகச் சிறப்பு. குறிப்பாக ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். 

வழக்கமான ஒரு கதை நாம் ஏற்கனவே பார்த்து பழகிய கதை மாந்தர்கள் அதே வட சென்னை ரவுடிகள் என பழைய பாதையில் படம் பயணித்தாலும் அதில் மல்யுத்தத்தை ஒரு அங்கமாக வைத்து அதன்மூலம் ஆக்ஷன் காட்சிகளை உருவாக்கி அதனுள் பழிவாங்கும் கதையை உட்புகுத்தி முழுக்க முழுக்க சிறப்பான ஆக்ஷன் படமாக இந்த பீனிக்ஸ் படம் அமைந்திருப்பது ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாகவும் மற்ற ரசிகர்களுக்கு ஓரளவு ரசிக்கும்படியான படமாகவும் இருக்கிறது. 

பீனிக்ஸ் - தெறி!