surya fake letter issue

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கியது. இந்தத் தீர்ப்பைப் பாராட்டிபல அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். அந்த வகையில் நடிகர் சூர்யா பெயரில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Advertisment

அதில், "இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதற்கான சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுடைய நலனுக்கான இயக்கங்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு நானும் அகரம் அறக்கட்டளை சார்பாக இணைந்துகொள்கிறேன். 4000 மருத்துவக் கல்வி இடங்கள் இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கிடைக்கவிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர்கல்வியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய மொத்தப்பதிவுச் சுட்டெண் (Gross Enrolement Ratio) தேசிய மற்றும் மாநில சராசரிகளைவிட அதிகமாகும். எனவே இந்தத் தீர்ப்பானது ஒரு வருடத்திற்கு 800க்கும் மேற்பட்ட கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் என்பது எனது நம்பிக்கை. சமூக நீதிப்பாதையில் தொடர்ந்து தமிழ்நாடு வீறு நடைபோடட்டும்; நாமும் உடன் நிற்போம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் இந்த அறிக்கை போலியானது என சூர்யா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சூர்யா பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை போலியானது" எனக் கூறியுள்ளார். மேலும், போலியான அறிக்கை வெளியிட்டநபரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.