
விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளுள் ஒன்று ‘அது இது எது’. அந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதி ‘சிரிச்சா போச்சு’. இதில் கலந்துகொள்ளும் பல காமெடி நடிகர்களுள் ஒருவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் பிரபலம். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
இவருடன் சேர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாகப் பேசிவந்தார். பின்னர், சூர்யா தேவி மீது வனிதா வழக்குப் பதிவு செய்தார். இதனால், போலீஸார் அவரை கைது செய்தனர். தற்போதுதான், அந்த சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் புது பிரச்சனை உருவாகியுள்ளது.
தான் வசித்து வரும் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியுள்ளதாக, நாஞ்சில் விஜயன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவுடிகள் தாக்கிய புகைப்படங்களை வெளியிட்டு, இதனைத் தொடர்ந்து சூர்யா தேவி மீது நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ததாகச் சொல்லப்பட்டது.
தற்போது இந்தப் பிரச்சனையில் அதிரடி திருப்பமாக நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி புகார் அளித்துள்ளார். நேற்று மாலை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தலையில் காயங்களுடன் வந்த சூர்யாதேவி போலீஸாரிடம் கூறுகையில், “நானும் நாஞ்சில் விஜயனும் ஏறத்தாழ 6 வருடங்களாக நண்பர்களாகப் பழகி வந்தோம்.
நடிகை வனிதாவிற்கு எதிராக யூ டியூப்பில் கருத்து பதிவிட்டபோது தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் விஜயன் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதாவுடன் சமரசம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், இதுபற்றி கேட்பதற்காக கடந்த 11ஆம் தேதி இரவு நாஞ்சில் விஜயன் வீட்டிற்குச் சென்றேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் பேசிய நாஞ்சில் விஜயன் உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கினார். இதில், எனது மண்டை உடைந்தது.
இதைத் தடுத்த எனது நண்பர் அப்புவையும் கத்தியால் வெட்டினார். இதில், படுகாயமடைந்த இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினோம். இந்த நிலையில், நான் 3 பேருடன் வந்து நாஞ்சில் விஜயன் மற்றும் துணை நடிகை ஷீபாவை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குச் சென்று நாஞ்சில் விஜயன் நாடகம் நடத்தியுள்ளார்.
ஆகவே என்னையும் எனது நண்பர் அப்புவையும் தாக்கிய நாஞ்சில் விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரளித்துள்ளார்.