suriya

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். அவரது 2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில், 2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக 2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது மாதிரியான மோசடி நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி 2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அந்தப் பதிவில் சில ஸ்க்ரீன் ஷாட்களையும் அந்நிறுவனம் இணைந்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும் லோகோவையும் பயன்படுத்தி மோசடி நபர் ஒருவர் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியிருப்பதை அறிந்தோம். அதன்மூலம், ஏமாறக்கூடிய நபர்களை ஆடிஷனில் கலந்து கொள்ள அழைப்பது மற்றும் அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் வேலையை அவர் செய்கிறார். நாங்கள் அதுபோன்று எந்தவொரு ஆடிஷனையும் நேரடியாக நடத்தவில்லை. எங்கள் நிறுவனத்தின் படங்களுக்கான ஆடிஷன் அந்தப்படத்தின் இயக்குநரால் அவர் அலுவலகத்தில் வைத்துதான் நடத்தப்படும். ஆடிஷனில் கலந்துகொள்ள எந்தக் கட்டணமும் நாங்கள் வசூலிப்பதில்லை. இந்த மோசடி நபர் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். இது மாதிரியான மின்னஞ்சல் வந்தால் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் தங்களின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்களை பகிர வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

Advertisment