பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக யு/ஏ சான்றிதழுடன் நாளை (15.08.2024) வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியான நிலையில் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இதனிடையே படத்தின் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகியிருந்தது. கடைசியாக ‘அறுவடை...’ வீடியோ பாடல் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் விக்ரம் பேசியது, மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. விக்ரம் பேசியதாவது, “என் ரசிகர் பட்டாளம் பற்றி உங்களுக்கு தெரியாது, தியேட்டரில் வந்து பாருங்க” என விஜய், அஜித் அளவுக்கு உங்களுக்கு ரசிகர்கள் இல்லை என்ற கேள்விக்கு பதிலளித்திருந்தார். இதையடுத்து படத்தின் மொத்த பணிகளும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் தங்கலான் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்” என குறிப்பிட்டு விக்ரம் இருக்கும் தங்கலான் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.