கேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதை எழுதி மற்றும் திரைக்கதை அமைத்து அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘கண்ணப்பா’. ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால், பிரம்மானந்தம், மதுபாலா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சிவபெருமானின் பக்தரான கண்ணப்பரின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படக்குழுவினர் இப்படத்தினை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இப்படம் கடந்த 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இப்படம் சட்டவிரோதமாக 30,000 இணையதளங்களில் கசிந்துள்ளதாக படத்தின் நாயகன் விஷ்னு மஞ்சு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது பேரதிர்ச்சியை தருவதாகவும் இதை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து மற்றொரு பதிவில் சூர்யா இந்தப் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிடட்டுள்ளார். மேலும் சூர்யாவை இரு இன்ஸ்பிரேஷனாக பார்ப்பதாகவும் அவரிடம் இருந்து வாழ்த்து வந்திருப்பது சிறப்பான ஒன்று என்றும் குறிப்பிட்டு சூர்யாவை பெரிய அண்ணா என அழைத்து நன்றி கூறியுள்ளார். 

சூர்யா அனுப்பியிருந்த வாழ்த்து கடிதத்தில் “இந்த அற்புதமான மைல்கல்லுக்கு டியர் பிரதர் விஷ்னு மஞ்சுவிற்கு எனது வாழ்த்துக்கள். உங்களுடைய ஆர்வம், கடின உழைப்பு, நம்பிக்கை அனைத்தும் உண்மையிலேயே பலனளித்துள்ளன. பல மனங்களை தொடும் அளவிற்கு நீங்கள் இந்த படத்தை உருவாக்கியுள்ளீர்கள் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு இன்னும் வெற்றி வந்து சேர வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ரஜினி இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.