சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடத் தொடக்கத்தில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சூர்யாவின் கெட்டப் பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் யூட்டியூபில் தற்போது வரை 24 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் கிளிம்ப்ஸ்க்கு கிடைத்த வரவேற்பு குறித்து சூர்யா பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கடுமையாக பாடுபடுவேன். உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் கிளிம்ப்ஸ்க்கு கொடுத்த அற்புதமான வரவேற்புக்கும் நன்றி. மாநிலங்கள் முழுவதும் பல்வேறு நலத்திட்ட செயல்பாடுகளைச் செய்த எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. மனம் நிறைந்துவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.