ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டில் விலங்களின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக இதற்கு முன்பு ஆட்சி செய்த ஜெகன் மோகன் ரெட்டி மீது குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து உடனடியாக அரசு சார்பில் திருப்பதி லட்டை ஆய்வுக்குட்படுத்தியதில், லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படமானது தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக அரசியலில் வெடிக்க, பா.ஜ.க.வினர் ஒருபக்கம் ஜெகன் மோகன் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வந்தனர். மறுபக்கம் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் ஜனசேனா கட்சி தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், கலப்பட விவகாரத்தில் திருப்பதியில் 11 நாள் விரதம் இருந்து வந்தார்.
இந்த சூழலில் ஹைதராபாத்தில் நடந்த மெய்யழகன் பட நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தி “லட்டு சென்சிடிவ் டாப்பிக்” என்று கூறி பேச மறுத்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பவன் கல்யாண், லட்டு தொடர்பாக கார்த்தி பேசியதை சுட்டிக்காட்டி சனாதன விஷயத்தில் கருத்து தெரிவிக்கும் முன்பு 100 முறை யோசிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இதற்கு கார்த்தி மன்னிப்பு கோரி இருந்தார்.
இந்த நிலையில் மன்னிப்பு கூறிய கார்த்திக்கு பவன் கல்யாண் பதிலளித்துள்ளார். இது தொடர்பான அவரின் பதிவில், “கார்த்தி உங்களின் விரைவான பதிலையும் பாரம்பரியத்தின் மீது நீங்கள் காட்டிய மரியாதையையும் பாராட்டுகிறேன். திருப்பதி கோயிலும் அங்கு கொடுக்கப்படும் புனித லட்டும் கோடிக்கணக்கான பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. எனவே இந்த விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். இதை எந்தவித உள்நோக்கமுமின்றி உங்களின் கவனத்திற்கு கொண்டுவரத்தான் விரும்பினேன். அங்கு நடந்தது தற்செயலானது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
பிரபலங்கள் என்ற முறையில் ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்க்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கவேண்டும். குறிப்பாக மிகவும் மதிக்கும் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும். சினிமாவில் இருந்துகொண்டு இந்த கலாச்சார உணர்வுகளை உயர்த்த முயலுவோம். அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் நம் சினிமாவை மேம்படுத்தும் ஒரு நடிகராக உங்கள் மீது மரியாதையுள்ளது. உங்களின் மெய்யழகன் படத்திற்கு வாழ்த்துகள்” என்று கூறினார். இதற்கு சூர்யா, கார்த்தி இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்தனர்.