ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ எனப் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த ‘வாடிவாசல்’ படம் சில காரணங்களால் தள்ளிப் போகிறது.
திரைத்துறையைத் தாண்டி ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியில் உதவி செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையின் 15ஆம் ஆண்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மாணவர்கள், தாங்கள் கடந்து வந்த பாதை மற்றும் தற்போது நல்ல நிலைமையில் இருக்கும் சூழல் குறித்து மிகவும் எமோஷ்னலாக பேசியிருந்தனர். இது பலரையும் உணர்ச்சிவசப்படுத்தியதோடு பல மாணவர்களுக்கு உந்துதலாகவும் அமைந்தது. மாணவர்களின் பேச்சை கேட்ட சூர்யா மிகவும் எமோஷ்னலாகி கண்கலங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தனர். இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டை பெற்றது.
இதையடுத்து சூர்யா, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் மூலம் அரசியலில் களமிறங்கவுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருந்தது. இந்த தகவலை தற்போது சூர்யா தரப்பு மறுத்துள்ளது. இது தொடர்பாக சூர்யா நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக சூர்யா, பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.
கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.
சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள். சூர்யாவின் கவனம் சினிமாவில் மட்டுமே இருக்கும். சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.