ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ஆனால் படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த ‘வாடிவாசல்’ படம் சில காரணங்களால் தள்ளிப் போகிறது. இதனையடுத்து மலையாள இயக்குநர் ஜீத்து மாதவனுடன் ஒரு படம் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிப்பதை தாண்டி 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இப்படம் மூலம் 36 வயதினிலே, பசங்க 2 உள்ளிட்ட படங்களில் தொடங்கி கடைக்குட்டி சிங்கம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த ரெட்ரோ படத்தை தயாரித்திருந்தார். இதனிடையே கடுகு, கார்கி உள்ளிட்ட இன்னும் இரண்டு படங்களை விநியோகம் செய்துள்ளார்.
இந்த நிலையில் சூர்யா, புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ழகரம்’ என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதில் முதல் படமாக அவர் அடுத்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் ஜீத்து மாதவனுடைய படம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அதே போல் பா.ரஞ்சித்துடன் ஒரு புதுப்படம் பண்ண பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் அகரம் என்ற அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்பதும் இந்த அறக்கட்டளையின் 15ஆம் ஆண்டு விழா கடந்த ஆகஸ்டில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு அது பலரது கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.