/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/128_21.jpg)
சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளுக்கு மேலாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து தாய்லாந்தில் சமீபத்தில் நடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அந்த படப்பிடிப்பில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியுள்ளது. அதில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, சூர்யா விரைவில் குணமடைய சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டனர். பின்பு இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்த சூர்யா, உடல் நலம் தேறி வருவதாகவும், உங்கள் அன்புக்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் சூர்யா முழுவதுமாக குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் அன்னதானம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினர். இதனை தொடர்ந்து, வெளிநாட்டிற்கு தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்றார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில் ஓய்வை முடித்து தற்போது இந்தியா திரும்பியுள்ளார் சூர்யா. மும்பை விமான நிலையத்தில் தனது மனைவி ஜோதிகாவுடன் அவர் நடந்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)