Skip to main content

மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப்‌ பிழைகளை கண்டுபிடிக்கும்‌ சாணக்கியர்கள்... இது நாளையும்‌ நடக்கும்..! -சூர்யா எச்சரிக்கை!

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
gegsgs

 

 

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் நேற்று இந்தியா முழுவதும் நடந்து முடிந்தது. இதற்கிடையே இந்த தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

''நீட்‌ தேர்வு பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்‌ போகும்‌ மாணவர்களுக்கு 'வாழ்த்து' சொல்வதற்கு பதிலாக 'ஆறுதல்‌' சொல்வதைப் போல அவலம்‌ எதுவுமில்லை. 'கரோனா தொற்று' போன்ற உயிர்‌ அச்சம்‌ மிகுந்த பேரிடர்‌ காலத்தில்கூட, மாணவர்கள்‌ தேர்வெழுதி தங்கள்‌ தகுதியை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும்‌ சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம்‌, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச்‌ சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின்‌ நிதர்சனம்‌ அறியாதவர்கள்‌ கல்விக்‌ கொள்கைகளை வகுக்கிறார்கள்‌. கரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது. 'தேர்வு பயத்தில்‌ மாணவர்‌ தற்கொலை' என்ற செய்தி, அதிகபட்சம்‌ ஊடகங்களில்‌ அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின்‌ மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப்‌ பிழைகளை கண்டுபிடிக்கும்‌ சாணக்கியர்கள்‌, 'அனல்‌ பறக்க' விவாதிப்பார்கள்‌.

 

நீட்‌ போன்ற 'மனுநீதி' தேர்வுகள்‌ எங்கள்‌ மாணவர்களின்‌ வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும்‌ பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள்‌ பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும்‌ வயிற்றிலும்‌ அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள்‌ தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின்‌ நலன்‌ மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லாத நம்‌ கல்வி முறையில்‌, இனி பெற்றோர்களும்‌, ஆசிரியர்களுமே விழிப்புடன்‌ இருக்க வேண்டும்‌. நமது பிள்ளைகளின்‌ தகுதியையும்‌ திறனையும்‌ வெறும்‌ தேர்வுகள்‌ தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத்‌ தயார்படுத்த துணைநிற்பது போலவே, மாணவர்கள்‌ வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும்‌ தயார்படுத்த வேண்டும்‌. அன்பு நிறைந்த குடும்பம்‌, உறவு, நண்பர்கள்‌ சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின்‌ முடிவுகள்‌ அற்பமானது என்பதை உணர்த்துவது முக்‌கியம்‌. மகாபாரத காலத்து துரோணர்கள்‌ ஏகலைவன்களிடம்‌ கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள்‌. நவீனகால துரோணர்கள்‌ முன்னெச்சரிக்கையுடன்‌ ஆறாம்‌ வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்‌ என்று கேட்‌கிறார்கள்‌. இதையெல்லாம்‌ கடந்து படித்து முன்னேறுகிறவர்களை 'பலியிட' நீட்‌ போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்‌திருக்கிறார்கள்‌.

 

ஒரே நாளில்‌ 'நீட்‌ தேர்வு' மூன்று மாணவர்களைக்‌ கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும்‌ நடந்தது. இனி நாளையும்‌ நடக்கும்‌. நாம்‌ விழிப்புடன்‌ இல்லாமல்‌ போனால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நடந்து கொண்டே இருக்கும்‌. அப்பாவி மாணவர்களின்‌ மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீவைக்கற 'நீட்‌ தேர்வுக்கு' எதிராக ஒரு சமூகமாக நாம்‌ ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம்‌" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அசைவம் ஊட்டி விடுவாரு” - கண்ணீர் மல்க சூர்யா அஞ்சலி!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Surya tribute to Vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

சூர்யா பேசியதாவது, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசு அவ்ளோ கஷ்டமாயிருக்கு. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தரவில்லை. பெரியண்ணா படம் அவரோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நாளும் சகோதர அன்போடு இருப்பாரு, அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடுவதில்லை, அப்ப அவர் ஒரு வார்த்தையை உரிமையா சொல்லி ஏன் சைவம் சாப்பிடுறேன்னு திட்டி அவருடைய தட்டிலிருந்து எடுத்து சாப்ட வச்சாரு, நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும்னு ஊட்டிவிடுவாரு”

“அவரோட நடிச்ச நாட்களில் பிரமிச்சு பார்த்தேன். அவரை இலகுவாக அனைவரும் அணுகலாம். கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது அவருடைய உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மாதிரி யாரும் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகம் பார்க்க முடியாதது என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சிக்காரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். விஜயகாந்த் இறந்தபோதே சூர்யா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். 

Next Story

‘ஜெய்பீம்’ அங்கீகாரம் சிலிர்ப்பூட்டுகிறது; முதல்வருக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

 The 'Jaibhim' recognition Thanks Surya

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர். சர்வதேச அரங்கில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள இப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியல் வரை சென்று பின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகர் சூர்யா தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள் எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடையச் செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.” என்று பதிவிட்டுள்ளார்.