
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, 2006-ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு இருவரும் இணைந்து, 'காக்க காக்க', 'ஜில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடிப்பதைத் தவிர்த்து வந்தனர்.
பின்னர், 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சூர்யா. நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்பிய ஜோதிகா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து இந்நிறுவனத் தயாரிப்பின் கீழ் நடித்துவந்தார். மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து சூர்யா, ஜோதிகா இருவரிடமுமே நேர்காணலின் போது தொடர்ந்து கேள்வியெழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சூர்யா, ஜோதிகா தம்பதி ஒரு படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான கதையை இயக்குனர் ஹலிதா ஷமீம் எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. இக்கதை சூர்யா, ஜோதிகா தம்பதிக்குப் பிடித்து, அதில் நடிக்க விரும்பும்பட்சத்தில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர், நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.