/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/472_9.jpg)
சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் மே 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் வரிசையில் ஹைதராபாத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, தனது அடுத்த படத்தை அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “இன்று நான் அறிவிக்கிறேன். முதலில் அல்லு அரவிந்த் சாரிடம் ஆரம்பிக்கிறேன். அவரிடம் இருந்துதான் எல்லாமும் தொடங்கியது. அவரது ஆசீர்வாதத்துடன் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வம்சியுடன் ஒரு படம் பண்ண இணைந்துள்ளேன். இதுதான் என் அடுத்த படமாக இருக்கும். மே முதல் படப் பணிகளைத் தொடங்குகிறோம். ஒரு அழகான பயணமாக இது இருக்கும்” என்றார்.
ரெட்ரோ படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதை முடித்துவிட்டு நீண்ட காலமாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்த வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளும் வேகமெடுத்தது. பின்பு வருகிற ஜூலை முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த படம் தொடங்குவதற்கு முன்னதாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே பல்வேறு காரணங்களால் வாடிவாசல் தள்ளி போனது அப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் தள்ளி போகவுள்ளதாக தெரியும் சூழலில் இது மேலும் அந்த ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/471_15.jpg)
சூர்யாவின் அடுத்த பட இயக்குநரான வெங்கி அட்லூரி தெலுங்கு இயக்குநர் ஆவார். ஆனால் தமிழில் தனுஷை வைத்து வாத்தி படம் இயக்கினார். இப்படம் தமிழ் - தெலுங்கு இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டது. இதையடுத்து துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் படம் எடுத்தார். இப்படம் தெலுங்கில் மட்டும் படமாக்கப்பட்டு தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. சூப்பர் ஹிட்டும் ஆனது குறிப்பிடத்தக்கது.
Follow Us