/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/09_39.jpg)
சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா, இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
அடுத்த வருட தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில்,சூர்யா நேற்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார். கடந்த சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில், அதற்கு நன்றி கூறும் விழாவாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தனது அடுத்த படங்களை பற்றி பேசிய சூர்யா, லோகேஷ் கனகராஜுடன் இணைவது குறித்தும் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதை வைத்து ஒரு தனிக் கதை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளதாகவும், சமீபத்தில் தன்னை சந்தித்து அந்த கதை கூறப்பட்டதாகவும், அப்போது கமிட் செய்த படங்களை முடித்துவிட்டு அதை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே லோகேஷ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)