Skip to main content

ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து நான்கு படங்களை ரிலீஸ் செய்யும் நடிகர் சூர்யா!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

bdsgsehs

 

எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகின்றன. 'ஜெய் பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்', 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய படங்கள் தொடர்ந்து செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு படங்களாக வெளியாகவுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவும், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வகையில், திரில்லர், சஸ்பென்ஸ், காமெடி, ஃபேமிலி டிராமா என பல்வேறு ஜானர்களில் படத்தைத் தயாரித்துள்ளனர். 

 

ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரித்த இந்தத் திரைப்படங்களில் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 1 - பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் ஆகியோருடன் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படம். 2 - சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், சித்து ஆகியோர் நடித்த குடும்ப ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான 'உடன்பிறப்பே' படம். 3 - அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார், வினய் ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய 'ஓ மை டாக்’ என்ற படம். 4 - ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' என்ற படம் உட்பட நான்கு படங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.

 

'அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ்த் திரைப்படங்களுக்கென மிகப்பெரிய நூலகம் ஒன்று எங்களிடம் உள்ளது' என அமேசான் பிரைம் வீடியோவின் இயக்குநரும், உள்ளடக்கத் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்... "சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் உடன் நாங்கள் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் திரையுலகில் புதிய மைல்கல் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அத்துடன் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் நான்கு திரைப்படங்களை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திலிருந்து நேரடியாக உலகளாவிய திரைப்பட பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம். 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 'சூரரைப் போற்று', 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்களிடமிருந்து எதிர்பார்க்காத அளவில் அன்பும், ஆதரவும் கிடைத்தது. 

 

அதனைத் தொடர்ந்து உள்ளூர் மொழியிலான திரைப்படங்கள் கடந்த வருடத்தில் 50 சதவீத பார்வையாளர்களை சென்றடைந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறோம். இவர்கள் தமிழக எல்லையைக் கடந்த பார்வையாளர்கள் என்பது குறிப்பிடதக்கது. உள்ளூர் மொழியில் நேரடியாக படங்களை வெளியிடுவதன் மூலம் 20 சதவீதம் வரை சர்வதேச பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 2டி என்டர்டெய்ன்மென்ட் போன்ற ஆக்கப்பூர்வமான பட நிறுவனத்துடனான எங்கள் வலுவான உறவு மேலும் தொடர்கிறது. இதன் காரணமாக உள்நாட்டு, உள்ளூர் மொழியில் தயாராகும் கதைகளை, அதற்கான பார்வையாளர்களைக் கண்டறிந்து அவர்களிடத்தில் எடுத்துச் சென்றடைய வைப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றார்.

 

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான நடிகர் சூர்யா இதுதொடர்பாக பேசுகையில்... "கடந்த ஆண்டு பெரும் மாற்றமாக அமைந்தது. முன்னோடிகள் இல்லாத சூழ்நிலையில், திரைப்பட வெளியீட்டின் பல்வேறு புதுமைகளை நாங்கள் மேற்கொண்டோம். 2டி நிறுவனத்தின் அண்மைய திரைப்பட வெளியீடுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையாக அமேசான் இருக்கிறது. 'பொன்மகள் வந்தாள்' முதல் 'சூரரைப் போற்று' வரை இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பார்வையாளர்களைச் சென்றடைந்தது. இதற்கு காரணமான அமேசான் பிரைம் வீடியோ உடன் தொடர்ந்து தொழில்ரீதியான ஒத்துழைப்பை நீட்டிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றார்.

 

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் விவரங்களின் பட்டியல்கள் வருமாறு...

 

hrehejed

 

‘ஜெய் பீம்’ (நவம்பர் 2021) 


த.செ. ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’, ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். இது பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்துவருகிறார்கள். ராஜகண்ணு போலீசாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனைத் தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர் நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே ‘ஜெய் பீம்’ படத்தின் கதை. ஒளிப்பதிவு - எஸ்.ஆர். கதிர்; இசை - ஷான் ரோல்டன்; கலை - கே. கதிர்; படத்தொகுப்பு - பிலோமின்; உடைகள் - பூர்ணிமா ராமசாமி.

 

hfhdnnh

 

‘உடன்பிறப்பே’ (அக்டோபர் 2021)


இயக்குநர் இரா. சரவணன் இயக்கிய திரைப்படம் ‘உடன்பிறப்பே’. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன் - மாதங்கி இருவருக்கும் இடையேயான நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. நீதிக்காக வன்முறை வழியில் போராட வேண்டும் என வைரவனும், சட்ட விதிகளின்படி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும் என மாதங்கியின் கணவர் சற்குணமும் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்கிடையேயான விரிசலை நீக்கவும், குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவும் மாதங்கி எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிறது. இறுதியில் இந்தக் குடும்ப ஒற்றுமைக்காக மாதங்கி எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுதான் ‘உடன்பிறப்பே’. இசை - டி. இமான்; ஒளிப்பதிவு - வேல்ராஜ்; படத்தொகுப்பு - ரூபன்; கலை இயக்கம் - முஜிபூர்; உடைகள் - பூர்ணிமா ராமசாமி.

 

bfhehdrh

 

‘ஓ மை டாக்’ (டிசம்பர் 2021)


அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கிய இந்தத் திரைப்படம், குழந்தைகளின் உலகம், அவர்களின் ஆசை, துணிச்சல், தைரியம், நட்பு, நிபந்தனையற்ற அன்பு, விசுவாசம் ஆகியவை குறித்துப் பேசும் அற்புதமான திரைப்படம். பிறவிக் குறைபாடு காரணமாக ஒரு நாய்க்குட்டியை அதன் எஜமானர்களால் கொல்ல உத்தரவிடப்படுகிறது. ஆனால் அது இறுதியில் கொலையாளிகளிடமிருந்து தப்பிக்கிறது. ஒரு பையன் அனைவராலும் வெறுக்கப்படுகிறான். நல்ல மாணவன் அல்ல, அழகான பையனும் அல்ல. ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அதிர்ஷ்ட குழந்தை. நாய்க்குட்டியும், அந்தப் பையனும் சந்திக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் இதயங்களை வென்று தங்களைத் தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கிறார்களா என்பதே இப்படத்தின் கதை. ஒளிப்பதிவு - கோபிநாத்; இசை - நிவாஸ் கே பிரசன்னா; எடிட்டர் - மெகா; கலை - மைக்கேல்; உடைகள் - வினோதினி பாண்டியன்.

 

hfhrdhdr

 

‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ (செப்டம்பர் 2021)


இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கிய நகைச்சுவைத் திரைப்படம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒரு கிராமத்தைப் பற்றிய செய்தி வெளியாகிறது. ஆனால், அந்தக் கிராம மக்களுக்கு டிவி பார்க்க மின்சாரம் இல்லை. குனிமுத்து 35 வயதான அப்பாவி, விவசாயி. கருப்பன், வெள்ளையன் என்ற தனது காளைகளை இழக்கிறார். அவருக்கும் அவரது மனைவி வீராயிக்கும் குழந்தைகளைப் போல் அந்தக் காளைகள் இருந்தன. அவர் தனது நண்பர் மாந்தினியுடன் தனது காளைகளைத் தேட தொடங்குகையில், அவர் தற்செயலாக நர்மதா என்ற நிருபரைச் சந்திக்கிறார். அவர் அவர்களுக்கு உதவுகிறார். பெரும் போராட்டத்தின் மத்தியில் காளைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். கிராமத்தையும் மேம்படுத்த வேண்டும். இது நடந்ததா? என்பதே இத்திரைப்படத்தின் கதை. ஒளிப்பதிவு - சுகுமார்; இசை - கிரீஷ்; படத்தொகுப்பு - சரவணன்; கலை - முஜிபூர்; உடைகள் - வினோதினி பாண்டியன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது பெண்கள் தான்” - சூர்யா

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
suriya speech in stem 2024 in anna university

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய (STEM) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் பெண்கள் அதிகளவில் பங்குபெற வைக்க வேண்டும் என்பதை கருப்பொருளாகக் கொண்டு, அகரம் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பாக நடைபெறும் ‘EMPOW HER - 2024’ சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இதில் சூர்யா கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். 

அவர் பேசியதாவது, “அகரம் அமைப்போட கூட்டு முயற்சியில் படிப்பு சார்ந்து முதல் முறைய STEM பத்தின ஒரு கருத்தரங்கம் நடப்பது ரொம்ப முக்கியமானதாக பார்க்கிறேன். அகரம் ஆரம்பிச்சு 15 வருஷத்துல கிட்டத்தட்ட 6000 மாணவ, மாணவிகள் படிச்சு முடிச்சிருக்காங்க. படிச்சிட்டும் இருக்காங்க. அதுல 70 சதவீதம் பேர், பெண்களாகிய என் தங்கைகள். அகரம் அமைப்பில் வருஷம், வருஷம் 70 சதவீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்பதை ஒரு விதிகளாக பின்பற்றி வருகிறோம். படிச்சு முடிச்சப் பிறகு அவர்களுக்கு என்ன பண்ணலாம் என குழுவா யோசித்த போது, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளட்டக்கிய (STEM) படிப்பிலும் துறையிலும் பெண்களுடைய பங்களிப்பு கிட்டதட்ட 30 சதவீதம் தான் இருக்கு என தெரியவந்தது. STEM என்பது வெறும் படிப்பு மட்டும் கிடையாது. அதில் கிரியேட்டிவிட்டி, பிரச்சனைகள் தீர்ப்பது, புதுமை என எல்லாமே அடங்கியிருக்கு. இது அனைத்துமே பெண்களுக்கு இயல்பாகவே வரக்கூடியவை. அப்புறம் ஏன் வரமாட்டிங்குறாங்க என பார்த்தால் அவர்களுக்கு ஒரு முன் மாதிரி யாருமே இல்லைன்னு காரணம் வைக்குறாங்க. ஆனால் அது இல்லை. 

பெண்கள் நமக்கு சிசிடிவி, டயாப்பர், பீர், வீடியோ கால் என ஏகப்பட்ட விஷயங்களை கண்டுபுடிச்சி கொடுத்துருக்காங்க. இந்தியாவுடைய அக்னி ஏவுகணையில் டெஸ்ஸி தாமஸ், இஸ்ரோவில் மங்கல்யான் உள்பட 14 மிஷின்களை வெற்றிகரமாக எடுத்ததில் விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. பெண்களின் பங்களிப்பு ஏகப்பட்டது இருக்கு. வழக்கம் போல எல்லா இடத்திலும் கவனிக்கப்படுகிற, பாராட்டப்படுகிற, பேசப்படுகிற நபர்களாக ஆண்கள் மட்டும் தான் இருந்திருக்காங்க. என்னை சுற்றி உள்ள பெண்கள் ரொம்ப, ரொம்ப சக்தி வாய்ந்தவங்களாக இருந்திருக்கிறார்கள்.  அகரம் அமைப்பை நடத்துவது பெரும்பாலானோர் பெண்கள் தான். அவர்களால் முடியாதது எதுவுமே இல்லை. இதை நான் முழுமையாக நம்புறேன். பள்ளியில், கல்லூரிகளில் அதிகம் தேர்ச்சி பெறுவது பெண்கள். ஆனால் அதுக்கப்புறம் அவர்கள் என்னவாகிறார்கள் என்ற கேள்வி மில்லியன் டாலர் கேள்வியாக இருக்குது. 

நம்ம சமுதாயம் அவர்கள் மீது பல விஷயங்கள் கொடுக்குது. தொடர்ந்து வேலை செய்ய முடியாது, குழந்தை பிறந்துவிடும், நம்பமுடியாது என பல தடைகள் இருக்கு. அதை தகர்த்திட்டு வரோம். உடல் வலிமையை வைச்சி தான் ஜெயிக்க முடியும்-னு நினைச்சிகிட்டு இருக்குற ஸ்போர்ட்ஸுலையும் இந்தியாவை எங்கேயே கொண்டு போறது பெண்கள் மட்டும் தான். அது எல்லாத் துறைகளிலும் ஆகட்டும். படிச்சால் மட்டுமே போதும். பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை ஒரு சர்வே சொல்லுது. ஆண் பொறியாளரையும், பெண் பொறியாளரையும் ஒப்பிட்டு பார்த்தபோது மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது பெண்கள் தான் என ஒரு சர்வே சொல்லுது. ஆழ் மனதில் நாம் என்ன ஆக வேண்டும் என ஏங்கி தவிக்கிறோமோ அதுவாக கண்டிப்பாக ஆக முடியும். ஒரு ஆண் உழைப்பதை விட 50 சதவீதம் அதிகம் உழைத்தால் தான், பெண்களுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்குது. ஆனால் ஒரு பெண்ணால், 5 ஆண் மகன் பண்ணக்கூடிய வேலையை நான் திரும்பத் திரும்ப பார்த்திருக்கேன். அவர்களை நாம் பாரட்டுவோம். அவர்கள் மேலே உயர்வதற்கு எல்லாருமே சேர்ந்து உழைப்போம்” என்றார். 

Next Story

“என் துணையே, என் பலமே...” - சூர்யா பெருமிதம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
suriya wishes on jyotika Shaitaan movie release

தமிழை தாண்டி மற்ற மொழி படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா. அந்த வகையில் மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் - தி கோர் படத்தில் நடித்திருந்தார். கடந்த வருட நவம்பரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் 'ஸ்ரீ' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. மே 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

இதனிடையே விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள சைத்தான் படத்தில் நடித்துள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோரோடு இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். பனோரமா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. நேற்று நடந்த இப்பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். இப்படம் மகளிர் தினமான இன்று வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் ஜோதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “என்னவளே... என் துணையே, என் பலமே. சைத்தான் படம் மூலம் மீண்டும் உன்னுடைய புதிய பயணத்தை தொடங்குகிறாய். நீ செய்யும் அனைத்திலும் நான் பெருமை கொள்கிறேன். நிறைய அன்பும் மரியாதையும்” என குறிப்பிட்டுள்ளார். இந்தியில் ஜோதிகா நடிப்பில் 'டோலி சஜா கே ரக்கீனா' மற்றும் 'லிட்டில் ஜான்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அதை தொடர்ந்து 23 வருடங்கள் கழித்து இந்தியில் சைத்தான் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.