உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா வருகிற 12 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் போட்டியிடுகிறது. இந்தியாவில் டெல்லியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படப் பிரிவிலும் போட்டியிடுகிறது. இந்த நிகழ்வின் தொகுப்பாளர் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனேவும் இடம்பெற்றுள்ளார்.
முன்னதாக ஆஸ்கர் அமைப்பு 397 புகழ் பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு புது உறுப்பினராக இணைய அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யாவும் ஒருவர்.ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றார். சூர்யாவை தவிர்த்து கஜோல் மற்றும் இந்தி இயக்குநர் ரீமா காக்டி உள்ளிட்ட சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
உலகம் முழுவதும் சுமார் 4,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். புது உறுப்பினர்கள் ஆஸ்கர் பட்டியலில் இருக்கும் திரைப்படங்களைத்தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள். இந்த நிலையில் ஆஸ்கரின் அழைப்பை ஏற்ற சூர்யா தற்போது தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.