suriya 46 update

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறனுடன் அவர் கூட்டணி வைத்த வாடிவாசல் பட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படத்திற்கு முன் வேறொரு படத்தில் நடிக்கவுள்ளதாக சூர்யா அறிவித்தார். இப்படம் சூர்யாவின் 46வது படமாக உருவாகிறது.

சூர்யா 46வது படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரிக்கிறார். இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகவுள்ளது. படத்தின் பூஜை கடந்த மாத இடையில் நடைபெற்றது. அப்போது படத்தின் படப்பிடிப்பு கடந்த மே இறுதியில் தொடங்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

இதனையடுத்து படத்தின் படப்பிடிப்பு கடந்த 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கடந்த 5ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. மேலும் பழனி முருகன் கோயிலில் சூர்யா, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மூவரும் படத்திற்கான திரைக்கதை அடங்கிய ஸ்கிரிப்ட்டை வைத்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், “கொண்டாட்டம், எமோஷன், எண்டர்டெயின்மெண்டை நோக்கி முதல் படி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் ‘கொண்டாட்டம் தொடங்கியது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் படம் கொண்டாட்டமாக அமையும் என சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisment