/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/401_56.jpg)
நடிகர் சூர்யா தற்போது தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் அந்தமானில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சூர்யாவின் பிறந்தநாளான கடந்த மாதம் 23ஆம் தேதி அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு வீடியோ வெளியிட்டது . இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஊட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக 100க்கும் மேற்பட்ட ரஷ்ய நடிகர்கள் நடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
இதையடுத்து படப்பிடிப்பிலிருந்த சில ரஷ்ய நடிகர்கள் ரஷ்யாவிற்கே சென்றுள்ள நிலையில் மீதியுள்ள ரஷ்ய நடிகர்கள் நீலகிரியிலுள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் குறித்த விவரங்களை அந்த விடுதியின் நிர்வாகத்தினர் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா விசாவில் வெளிநாட்டவர்கள் படப்பிடிப்பில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் பேரில், அந்த தனியார் விடுதிக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் எப்படி இங்கு வேலை செய்ய அனுமதித்தனர்? என்றும் அவர்கள் வேலை செய்து வருவதை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையாகத் தெரிவிக்காதது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் நீலகிரி மாவட்ட தனிப் பிரிவு போலீஸார் இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)