நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'சூர்யா 40' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா இரண்டாம் அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது கரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு,சூர்யா, பிரியங்கா மோகன் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளைப்படமாக்கி வருகிறது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு 'சூர்யா 40' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வெளியிடப்படவுள்ளது. நடிகர் சூர்யா ஜூலை 23ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வெளியிடப்படுகிறது.