இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஐ.பி.எல். உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வுபெற்று வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். 

இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாயகனாக நடிக்கும் படத்தை ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் லோகன் என்பவர் படத்தை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றுகிறார். 

இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதை நினைவு கூறும் வகையில் சென்னையின் முக்கிய இடங்கள் மற்றும் சேப்பாக் சிதம்பரம் ஸ்டேடியமும், அதில் ரெய்னா நடந்து வருவது போலவும், இடையில் சியர்ஸ் கேர்ள்ஸ், உற்சாகப்படுத்துவது போலவும் எடிட் செய்யப்பட்டுள்ளது. 

இப்படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ரெய்னா, “கிரிக்கெட் மைதானங்கள் முதல் கோலிவுட் பிரேம்கள் வரை சென்னையின் உணர்வை என்னுடன் கொண்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ஐ.பி.எல்-லில் சென்னை அணிக்கு ஆடியவருமான ஹர்பஜன் சிங், 2021ஆம் ஆண்டு வெளியான ஃப்ரெண்ட்ஷிப் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகனாக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment