இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குநர் லோகன் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றுகிறார். அறிவிப்பு வீடியோ அண்மையில் வெளியானது. 

மேலும் படம் தொடர்பான துவக்க விழா நடைபெற்றது. இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, நிகழ்வின் துவக்கமாக விளக்கேற்றும் விழாவில் கலந்து கொண்டார். தொகுப்பாளருடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுபட்ட அவர், “இது ஒரு வரலாற்றுப் பொழுது. இத்தகைய ஒரு படத் திட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன் என்பது பெருமை!, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்” என தனது வாழ்த்துகளை பகிர்ந்தார்.

நிகழ்வில் பேசிய ரெய்னா, தனது தோழரான எம்.எஸ். தோனியும் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, “அவர் தான் அதுக்கு பதிலளிக்க வேண்டும!” எனச் சிரித்தபடி பதிலளித்தார். இயக்குநர் லோகன், “இத்தனை திறமைமிக்க அணி மற்றும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் போன்ற உறுதியான ஆதரவு கொண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் என் இயக்குநர் பயணத்தைத் தொடங்குவது ஒரு கனவு நனவாகும் தருணம்,” என உருக்கமாக தெரிவித்தார்.