சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் ரஜினி, நக்மா, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாட்ஷா’. பாலகுமரன் வசனம் எழுதியிருந்த நிலையில் தேவா இசை மற்றும் பாடல்களை கவனித்திருந்தார். ரஜினியின் ஸ்டைலிஷ் மற்றும் எளிமையான இரு கதாபாத்திரங்களின் நடிப்பு, ரகுவரனின் மிரட்டலான வில்லத்தனம், நக்மாவின் அழகு, தேவாவின் துள்ளல் கலந்த பாடல்களும் தெறிக்கவிடும் பின்னணி இசையும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது.
ரசிகர்களின் பேராதரவைப் பெற்று, தமிழ் சினிமாவின் மாஸ் படங்களில் முக்கிய படமாக இப்படம் இருந்து வருகிறது. இன்றளவும் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டால், ரசித்து பார்க்கும் ரசிகர் கூட்டம் இருந்து வருறது. இப்படம் வெளியாகி 30 வருடங்களை கடந்துள்ள நிலையில் இன்று படம் ரீ ரிலீஸாகியுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ், திரைத்துறையில் 60 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக இந்த ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறை காட்சி ரீதியாக 4கே தொழில்நுட்பத்திலும் ஒலிப்பதிவு ரீதியாக டால்மி அட்மாஸ் தொழில்நுட்பத்திலும் மீட்டுருவாக்கம் செய்து மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ரீ ரீலிஸ் தொடர்பாக பட இயக்குநர் சுரேஷ், ரஜினி நடிப்பு குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டியர் ரஜினி சார், பாட்ஷா இப்படி கொண்டாடப்படுவதற்கு காரணம் நீங்கள் தான். உங்களின் தெறிக்கவிடும் நடிப்பு அற்புதமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், இதெல்லாம் பார்க்கும் போது நீங்கள் பாட்ஷாவாக நடிக்கவில்லை பாட்ஷாவாகவே மாறிவிட்டீர்கள். சினிமா வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு கல்ட் கிளாசிக் படம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் “ஒரே ஒரு பாட்ஷா தான் இருக்கிறார், அது எங்கள் பாட்ஷா தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.