Advertisment

''முன்பு இருந்த அமைச்சர் யார் என்று கூட எங்களுக்கெல்லாம் தெரியாது'' - சுரேஷ் காமாட்சி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் இயக்குநராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்.

Advertisment

suresh

இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதியே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் சில படங்கள் ரிலீசானதால் போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால் இப்பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று, தற்போது இந்த படம் தமிழகம் முழுவதும் நவம்பர் 8ஆம் தேதி (இன்று)125 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இதற்கு பின்னணியில் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் அரசு தரப்பு கமிட்டி உறுப்பினர்களுக்கும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. அப்போது நிகழ்வில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியபோது....

fa

Advertisment

''இந்த படத்தை நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடியவில்லை. அந்த வருத்தத்தில் நான் கொஞ்சம் காரசாரமாக அறிக்கை எல்லாம் கொடுத்திருந்தேன். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக்குழு கமிட்டியினர் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என எங்களை அழைத்து ஆலோசனை நடத்தியதில், இன்றைய தேதியில் (நவம்பர் 8) ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்தோம். நான் எனது படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசவில்லை. எப்போதுமே நான் சின்ன படங்களுக்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்கவேண்டும் என்று தான் பேசி வருகிறேன். சிறிய படங்கள்தான் இன்று தமிழ் சினிமாவை வாழ வைக்கின்றன. பெரிய படங்கள் வருடத்திற்கு பத்து படங்கள்தான் வெளியாகும். அவை இந்த தமிழ் சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்களை காப்பாற்றி விடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிறிய படங்கள் ஓடும் ஓடாது என்பதை நாம் முடிவு செய்ய தேவையில்லை. அதை தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும். படம் நன்றாக இல்லை, ஓடவில்லை என்றால் அதை தியேட்டரில் இருந்து எடுத்துவிட வேண்டியதுதான். அதற்காக ஓடாத படத்தை வைத்துக்கொண்டு தியேட்டர்காரர்களும் கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். படம் ஓடவேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக இருந்தது.

எங்களுக்கு இந்த அளவிற்கு தியேட்டர்கள் கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்பு இதேபோன்று ஒரு படம் விஷயமாக ரோகிணி தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, அவர் சிறிய படங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகத்தான் கூறினார். ஆனால் இங்கே நமது தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து படங்களை ரிலீஸ் செய்வதில், இந்த படங்களுக்கு இத்தனை தியேட்டர்கள் தான் கொடுக்கவேண்டும் என்கிற ஒரு சிஸ்டம் வைத்திருந்தால் அவர்களிடம் நாம் முறையாக கோரிக்கை வைக்கலாம். ஆனால் நம்மிடம் சிஸ்டம் இல்லை என்பதுதான் இப்போதைய பிரச்சனை. இதற்கு தியேட்டர்காரர்களை குறை சொல்ல முடியாது. இதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைக்கிறோம். உதவி செய்யவில்லையே என்கிற போது அவர்களை திட்டுகிறோம். ஆனால், உதவி செய்யும்போது அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழாவில் அவர்களை வாழ்த்துகிறோம். அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். தான் எந்த அரசியல் நிலையை சார்ந்தவன் என்பதை எல்லாம் கடந்து எந்த நேரத்திலும் சினிமா தொடர்பாக யார் சென்று அவரை சந்தித்தாலும், அந்த பிரச்சனைகளை கேட்டு உடனடியாக அதற்கு தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்கிறார். இதற்கு முன்பு இருந்த செய்தித்துறை அமைச்சர் யார் என்று கூட எங்களுக்கெல்லாம் தெரியாது. இப்படி ஒரு செய்தித்துறை அமைச்சரை தந்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

miga miga avasaram suresh kamatchi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe