திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே காலங்காலமாக நிலவிவரும் பிரச்சனை, தற்போது ஓடிடி வெளியீடு என்ற வகையில் புதிய பரிமாணத்தைக் கண்டுள்ளது.
சமீபத்தில் பொங்கல் தினத்தையொட்டி வெளியான 'மாஸ்டர்' திரைப்படம், மிகக் குறுகிய நாட்களிலேயே ஓடிடி-யில் வெளியானது. இதனால், அதிருப்தியடைந்த திரையரங்க உரிமையாளர்கள், படம் வெளியாகி 30 நாட்களுக்குப் பிறகே படத்தை ஓடிடி-யில் வெளியிட வேண்டும் எனப் புதிய விதியை உருவாக்கியுள்ளனர். இப்புதிய விதி உருவாக்கத்தின் காரணமாக நாளை வெளியாக இருந்த 'ஏலே' திரைப்படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளது. இதனையடுத்து, 'ஏலே' திரைப்படத்தை விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 28-ஆம் தேதி நேரடியாக ஒளிபரப்ப தயாரிப்பு தரப்பு முடிவெடுத்துள்ளது.
இதற்கிடையே, ஓடிடி வெளியீடு தொடர்பான சர்ச்சை குறித்துப் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, திரையரங்க உரிமையாளர்களின்நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசினார். இந்த நிலையில், அமைச்சரின்கருத்துக்கு அதிருப்தி தெரிவித்து 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், "ஒரு துறை சார்ந்த அமைச்சர் அத்துறையில் உள்ள பிரச்சனைகள் குறித்த கருத்துகளைப் பதிவிடும்பொழுது, ஒரு சாராரை மட்டும் ஆதரித்துப் பேசுவது ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல். இனியாவது தயாரிப்பாளர் பிரச்சனைகளையும் அறிந்து, பின் பேசுங்கள் ஐயா" எனக் குறிப்பிட்டுள்ளார்.