‘கூலி’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து இப்படம் உருவாகும் நிலையில் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸே இப்படத்தையும் தயாரிக்க நெல்சனே இப்படத்தையும் இயக்குகிறார். அதே போல் அனிருத்தே இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழ்நாடு - கேரளா எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் நடந்தது. பின்பு கோயம்புத்தூரிலும் சில நாட்கள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் நடந்தது. டிசம்பரில் முடிய வாய்ப்பிருப்பதாக ரஜினி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில் நடிக்கவுள்ளதாக கடந்த ஏப்ரலில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் மற்றொரு மலையாள பிரபல நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச்சில் வெளியான ‘வீர தீர சூரன்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் மூலம் கவனம் ஈர்த்த அவர், இப்படத்திற்காக கொடுக்கப்பட்ட புரொமோஷன் பேட்டிகளில் கலகலப்பாக பேசி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அவர் தற்போது ஜெயிலர் 2-வில் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.