தக் லைஃப் பட விவகாரம்; கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

supreme court issues notice to karnataka seeking response on thug life ban

மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முன்னதாக நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்து கர்நாடகாவில் கொதி நிலையை ஏற்படுத்தியது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள், கன்னட மொழியை கமல் இழிவுபடுத்திவிட்டதாக போர்க்கொடிகள் தூக்கின.

மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது படக்குழுவே படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க விரும்புவதாக தெரிவித்தது. மேலும் கர்நாடக வர்த்தக சபையிடம் பேச்சுவார்த்தை நடத்த அவகாசம் கேட்டது. இதனால் கர்நாடகாவை தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் படம் வெளியானது. இந்த மனு நிலுவையில் இருக்கிறது.

இதனிடையே கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தக் லைஃப் படம் வெளியிடும் திரையரங்குகளில் பாதுகாப்பு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தக் லைஃப் படத்தை வெளியிட்டால் அந்த திரையரங்குகளில் தீ வைக்கப்படும் என மிரட்டல்கள் வருகிறது. அதனால் திரையரங்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே வேளையில் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தியேட்டர்களுக்கு தீ வைக்கப்பட்டால் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துங்கள் எனக் கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதி மன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தலையும் வழங்கியது.

இந்த நிலையில் மகேஷ் ரெட்டி என்பவர் தக் லைஃப் படத்திற்கு கர்நாடகத்தில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் விசாரணை இன்று நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்சார் போர்டு வாரியத்தின் சான்றிதழ் பெற்றும் சில தீய சக்திகளின் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாக தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக வாதாடினார். இதையடுத்து இந்த மனு தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ACTOR KAMAL HASSHAN karnataka Supreme Court Thug Life
இதையும் படியுங்கள்
Subscribe