
நடிகரும், நாடக ஆசிரியருமான ஒய். ஜி. மகேந்திரன் சாருகேசி நாடகத்தின் 50 வது அரங்கேற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசும்போது, "நான் 73 வயதிலும் ஆரோக்கியமாக இருக்க காரணம் என்னுடைய மனைவி தான். கண்டக்டராக இருக்கும் போது கெட்ட நண்பர்களின் பழக்கத்தால் அவர்களின் மூலம் கெட்ட பழக்கங்கள் வச்சுக்கிட்டு இருந்தேன். நடத்துநராக இருக்கும் போது தினமும் இரண்டு வேளையும் நான் வெஜ் தான் சாப்பிடுவேன். தினமும் மது அருந்துவேன். சிகரெட் எத்தனை பாக்கெட் பிடிப்பேன் என்று எனக்கே தெரியாது.
காலையிலேயே ஆப்பம், பாயா, சிக்கன் சிக்ஸ்டி பைவ் தான் சாப்பிடுவேன். வெஜிடேரியனை பார்த்தால் பாவமாக இருக்கும். இதை எப்படி சாப்பிடுவார்கள் என்று நினைப்பேன். மது, சிகரெட், நான் வெஜிடேரியன் இந்த மூன்றும் டெட்லி காம்பினேஷன். அளவுக்கு மீறி தொடர்ந்து பல வருடங்கள் சாப்பிட்டவர்கள் எனக்குத் தெரிந்து 60 வயசுக்கு அதிகமாக வாழ்ந்ததே கிடையாது. அதற்குள்ளாகவே இறந்து விட்டார்கள். 60 வயசுக்கு மேல வந்ததாலும் படுக்கையில் படுத்த படியே தான் வாழ்கிறார்கள். இதற்கு நிறைய பேரை உதாரணம் சொல்லலாம். இந்த மாதிரி இருந்த என்னை அன்பாலேயே மாற்றியவர் என்னுடைய மனைவி தான்.
இந்த மாதிரியான பழக்கங்களை எளிதில் விட முடியாது. அதில் இருந்து என்னை விடுவித்து ஒழுக்கம் உள்ளவனாக மாற்றியவர் என்னுடைய மனைவி லதா தான். என்னுடைய படங்களை பார்த்தாலே தெரியும் முன்னாள் நான் எப்படி இருந்தேன் இப்போது எப்படி இருக்கிறேன் என்று" பேசினார். இவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.