Skip to main content

‘டிமானிடைசேஷன்’ மையமாக வைத்து உருவாகும் காமெடி படம்! 

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
sundar

 

 

இயக்குனர் சுந்தர்.சி-யின் தயாரிப்பு நிறுவனம் அவ்னி மூவீஸ். இந்நிறுவனம் இதுவரை 'ஹலோ நான் பேய் பேசுறேன்', 'முத்தின கத்திரிக்கா', 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' உள்ளிட்ட ஐந்து படங்களை தயாரித்துள்ளது.

 

தற்போது 6வது திரைப்படத்தை தயாரிக்க லாக்டவுன் காலகட்டத்தில் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் விதிமுறைகளை ஏற்று இன்று படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது படக்குழு. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்.

 

மத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்தபோது பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டது. அப்படி பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவையாக கூறுவதே இப்படத்தின் மையக்கரு என்று சொல்லப்படுகிறது.

 

இந்த படத்தில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை 'வீராப்பு', 'தம்பிக்கு எந்த ஊரு' மற்றும் 'தில்லு முல்லு' ஆகிய படங்களை இயக்கிய பத்ரி இயக்கி வருகிறார். சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக பிரேமும் மற்றும் நடன இயக்குநராக தினேஷும் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி. கன்னடத்தில் வெளியாகி செம ஹிட்டான மாயாபஜார் 2016 என்னும் படத்தின் தமிழ் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாக அரண்மனை 3 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் சுந்தர்.சி ஆனால், லாக்டவுனால் ஷூட்டிங் முற்றிலும் முடங்கியது. மேலும், தற்போது ஷூட்டிங்கில் 75 பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் இருப்பதால் கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்த பிறகு அரண்மனை 3 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கலாம் என்னும் திட்டத்தில் உள்ளார் சுந்தர்.சி. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன்” - வெளிப்படையாகப் பேசிய குஷ்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kushbu sundar about aranmanai 4

2024 ஆம் ஆண்டு நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜ.க.வை சார்ந்த குஷ்பு, வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இயக்குநர் சி.சுந்தர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்தை பற்றிப் பேசினார். அவர் பேசியதாவது, “நாங்கள் அரண்மனை 4 பார்த்து விட்டோம். படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரையில் வந்த அரண்மனை படங்களை விட இது வித்தியாசமானதாக இருக்கும். நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் கமர்சியல் வேல்யூ முழுவதும் ஆக உள்ளது. யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.  

அவரிடம், அரண்மனை திரைப்படம் சீரிஸ் இன்னும் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்குமா, எப்போதுதான் அது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அதை நான் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், எழுத்தாளர் தான் முடிவு செய்வார்கள். இது தான் கதை. கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன் அவ்வளவுதான், எல்லாமே இயக்குநர் தான் முடிவு செய்வார் நான் அல்ல” என பதிலளித்தார். 

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்துள்ள படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியிருந்தது. 

Next Story

“ஒரு சின்னப் பெண் என் தயக்கத்தைப் போக்கினார்” - சுந்தர்.சி சுவாரஸ்யம்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
sundar c speech in aranmanai 4 trailer launch

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் அரண்மனை 4. அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு கலந்து கொண்டு பேசினர்

இயக்குநர் சுந்தர்.சி பேசியதாவது, “அரண்மனை நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன், முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றி தான் இப்படம் உருவாக காரணம். எப்போதும் நான் பணத்திற்காக இந்தப்படத்தைச் செய்யலாம் என நினைத்ததே இல்லை. ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் மட்டுமே இந்தப் படத்தைத் துவக்கியுள்ளேன். இப்படத்திற்கும் ஒரு அட்டகாசமான ஐடியா கிடைத்தது. நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் வட இந்தியாவைப் பிடித்த அளவு, அஸ்ஸாம் பக்கம் பிரம்மபுத்திராவை தாண்டிப் போகவில்லை. அது ஏன் எனக் கேட்டு ஆராய்ந்தால், பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. அதை வைத்து, மிக சுவாரஸ்யமான கதையை அரண்மனை 4 இல் செய்துள்ளோம். நான் வேறொரு படத்தில் வேலை செய்த போது இந்த ஐடியா கிடைத்தது. இதில் வேலை பார்க்கலாமா? எனத் தயங்கினேன். அந்த நேரத்தில் ஒரு பயணம் மேற்கொள்கையில் ஒரு சின்ன பெண், என்னிடம் அங்கிள் அரண்மனை 4 எப்போது வருமென்றார் ? அந்தப்பெண் என் தயக்கத்தை போக்கிவிட்டார். உடனே இந்த படம் ஆரம்பித்து விட்டேன். 

என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை. முழு ஆதரவு தந்தார்கள். அரண்மனை முதல் மூன்று படங்களை விட இப்படத்தில் எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும். இப்படத்தில் இரண்டு ஹீரோயின், ஒரு ஹீரோயின் ஒரே நேரத்தில் அவரைப் பார்த்தால் பயமாகவும் இருக்கணும், பரிதாபமும் வரணும், குழந்தைக்கு அம்மாவாக வரணும், யாரை அணுகுவது என்று நினைத்தேன். ஆனால் தமன்னா கேட்டவுடன் ஒத்துக்கொண்டார். அட்டகாசமாக நடித்துள்ளார். அவர் கேரியரில் இப்படம், அவரது வித்தியாசமான முகத்தைக் காட்டும். இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். ராஷி கண்ணா என்னை முழுமையாக நம்புவார். இப்படத்தில் நன்றாக நடித்துள்ளார். அரண்மனை படத்தில் காமெடி முக்கியம். என் படத்திற்கு ரசிகர்கள் வரக் காரணம் காமெடி தான், அதை நிறைவேற்றணும். பேப்பரில் நாங்கள் எழுதுவது பாதி தான், ஆர்டிஸ்ட் தான் அதை முழுதாக மாற்ற வேண்டும். அந்த வகையில் யோகி பாபு, சரளா மேடம், விடிவி கணேஷ், சிங்கம் புலி எல்லோரும் கலக்கியுள்ளார்கள். மொத்தத்தில் அரண்மனை 4 மனதிற்கு மிகப்பிடித்த படமாக வந்துள்ளது. பின்னணி இசையில் வழக்கமான பேய் படம் போல இல்லாமல் வித்தியாசமாகச் செய்துள்ளார் ஆதி” என்றார்.