காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுனைனா, நீர்ப்பறவை, தொண்டன், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய்யின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்த இவர் கடைசியாக ரெஜினா படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி வெளியானது.
இந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், "நான் இப்போது என் சிறு வயது சுனைனாவை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு கட்டத்தில் இதுபோன்று நடப்பது கனவாக இருந்தது. அது இப்போது நனவாகி இருக்கிறது. ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் பேசி மேடையிலே கண்ணீர் விட்டிருந்தார். இது பரவலாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல் ஒரு புகைப்படத்தை தனது சமுக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் சுனைனா. விரைவில் வலிமையுடன் மீண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதற்காக சிகிச்சை பெறுகிறார் என்றகாரணத்தை அவர் பகிரவில்லை. அதையும் விரைவில் பகிரவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுனைனாவின் புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.