Skip to main content

"தென்னிந்திய மொழியில் நடிக்க ரஜினி, சூர்யா படம்தான் காரணம்" - சுனைனா

 

sunaina speech at regina music and trailer launch

 

சதீஷ் தயாரிப்பில் சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாள பட இயக்குநர் டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ். வரும் ஜூன் 23 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குநர்கள் வெங்கட் பிரபு, எழில், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் சுனைனா பேசும்போது, "2006ல் என்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்ற ஒரு சின்னப் பெண்ணாக இருந்தேன். அந்த சமயத்தில் சினிமாவிற்கு வருவேனா என்றெல்லாம் தீர்மானித்து இருக்கவில்லை. அப்போது விடுமுறைக்காக ஹைதராபாத்திற்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம் தான் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம். 

 

அதற்கு முன்பு நடிகை ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் சந்திரமுகியை தொடர்ந்து கஜினி உள்ளிட்ட படங்களைப் பார்த்தபோது, நான் ஒரு தென்னிந்திய மொழி நடிகையாகத்தான் ஆக வேண்டும் என முடிவு செய்தேன். அந்த சமயத்தில் எனக்குள்ளே சினிமா குறித்த ஆர்வம் சின்சியாரிட்டி, நேர்மை எல்லாம் இருந்தது. இப்போது வரை அது இருக்கிறது” என்றார்.