ADVERTISEMENT

"அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்" - சரத்பாபு மறைவு குறித்து சுஹாசினி விளக்கம்

03:57 PM May 23, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப் பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பின்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இத்தகவலுக்கு விளக்கமளித்த அவரது குடும்பத்தினர் உடல்நிலை தேறி வருவதாகக் கூறினர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினிகாந்த், ராதிகா, சரத்குமார், சுஹாசினி, சுரேஷ் சந்த்ரா உள்ளிட்ட பிரபலங்கள் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சரத்பாபுவின் உடல் தி.நகரில் இருந்து கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பின்பு கிண்டி மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே சரத்பாபு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுஹாசினி, "கடந்த 92 நாட்களாக மருத்துவமனையில் இருந்தார். காய்ச்சல் காரணமாக முதலில் 2 மாதம் பெங்களூருவில் இருந்தார். அவரின் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று அங்கு சென்றார். அந்த காய்ச்சல் குறித்து அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 2 மாதத்திற்கு பிறகு தான் 'மல்டிபிள் மைலோமா' (Multiple Myeloma) என்ற நோய் இருந்தது தெரியவந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்பு ஒரு நாள் நானும் நடிகர் சிரஞ்சீவியும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் பேசினோம். முடிந்தளவுக்கு காப்பாற்ற முயல்கிறோம் என நம்பிக்கை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (22.05.2023) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவர் தமிழில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். அவருக்கு எந்த விதமான கெட்ட பழக்கங்களும் கிடையாது. அப்படி ஆரோக்கியமாக இருந்தும் இந்த 'மல்டிபிள் மைலோமா' என்ற நோய் நான்காவது கட்டத்தை எட்டிய பிறகு தான் தெரியவந்துள்ளது. இதனால் தான் அவரை நாம் இழந்துவிட்டோம். இனிமேல் உடலை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது ரொம்ப முக்கியம்" என்றார். 'மல்டிபில் மைலோமா' என்ற நோய் அரிய வகை புற்றுநோய் எனச் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT