குழந்தை நட்சத்திரமாக இரண்டு படங்களில் தோன்றி ‘ஜெயம்’ படம் மூலம் நாயகனாக அறிமுகாகி பின்பு அந்த பட டைட்டிலே அடைமொழியாக மாறி பின்பு அதே பெயருடன் பல்வேறு படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தவர் ஜெயம் ரவி. சமீபகாலமக ரவி மோகன் எனத் தனது பெயரை மாற்றிக்கொண்டு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ஒரு ஆல்பம் பாடலுக்கு பாடல் எழுதியதன் மூலம் பாடலாசிரியராகவும் உருவெடுத்தார்.
இப்போது ‘ப்ரோ கோட்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அதே சமயம் யோகி பாபுவை வைத்து ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதோடு கணேஷ் பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்திலும் அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ‘ஜீனி’ படத்திலும் நாயகனாக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று ரவி மோகன் பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு திரை பிரபலங்கள் பல்வேறு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா, “படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் இடத்தை தேடினால் அங்கே ரவி இருப்பார். அங்கு கதாபாத்திரத்திற்காகவும் நடிக்கப் போற சீனுக்காகவும் 200 சதவீத உழைப்பை கொடுக்க பயிற்சி எடுத்துக் கொண்டு இருப்பார். உங்களுடன் வேலை செய்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, என் அழகான ஜெண்டில்மேன் நடிகரே. பிறந்தநாள் வாழ்த்துக்கள்... உங்களுக்கு இனிய நேரங்கள் அமைய வாழ்த்துக்கள்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.