Skip to main content

"இந்த தருணத்தை பார்க்க அவர் இல்லை" - தேசிய விருது குறித்து சுதா கொங்கரா உருக்கம்

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Sudha Kongara released the notice regards she won national award

 

கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் இந்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டன. இதில் 'சூரரைப் போற்று' படம் சிறந்த படம், சிறந்த நடிகர் என மொத்தம் ஐந்து விருதுகள் வென்று சாதனை படைத்தது. மேலும் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் மூன்று விருதுகளும், 'மண்டேலா' படம் இரண்டு விருதுகளும் வென்றன. இந்த ஆண்டு மொத்தம் பத்து தேசிய விருதுகள் வென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த கலைஞர்களுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வென்ற சுதா கொங்கரா நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இப்படத்தின் பயணம் என் தந்தையின் மறைவில் இருந்து தான் தொடங்கியது. என் தந்தை படுக்கையில் இருந்தபோது, வாசலில் நின்றிருந்த என்னை கடைசியாக கையசைத்து கூப்பிட்டார். அந்த நிகழ்வை தான் சூரரைப் போற்று படத்திலும் வைத்திருந்தேன். ஒரு இயக்குனராக சொல்கிறேன், நம்மில் பலர், நம் வாழ்வில் நடந்த சிலவற்றை படத்தில் காட்சியாக வைக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர்கள் என நினைக்கிறேன். 

 

என் வாழ்வில் நடந்த பல தருணங்களை சூரரைப் போற்று படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன், அதற்கு என் தந்தைக்கு நன்றி. தேசிய விருது வென்ற இந்த தருணத்தில் எனக்கு ஒரே ஒரு வருத்தம், என் அப்பா இதை  பார்க்க இல்லை. என் குரு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு மணி சார் தான் காரணம். அவர் இல்லையென்றால் நான் வெறும் ஜீரோ தான். வாழ்க்கையை படமாக்க அனுமதித்த கோபிநாத் சாருக்கும், கோபிநாத்தாக வாழ்ந்த சூர்யாவுக்கு மிக்க நன்றி. என் குடும்பத்துக்கு மிகப்பெரிய நன்றி" என குறிப்பிட்டு ஜி.வி பிரகாஷ், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் ஊடகம், ரசிகர்கள், பெண் இயக்குநர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் சுதா கொங்கரா. 

 

 

 

சார்ந்த செய்திகள்