Sudha Kongara to direct Ratan Tata biopic

'துரோகி ' படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இதில் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'சூரரைப் போற்று' படம் 68வது தேசிய விருது விழாவில் 5 தேசிய விருதுகளை வாங்கியது. இப்போது இப்படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இதனைத்தொடர்ந்து கே.ஜி.எஃப் படத்தைத்தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்க ஒப்பந்தமானார். இப்படம் உண்மைக் கதையைத்தழுவி எடுக்கப்பட உள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் சுதா கொங்கரா பிரபல தொழிலதிபர் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரத்தன் டாட்டா கதாபாத்திரத்தில் சூர்யா அல்லது அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதை விவாத பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

தொழிலதிபர் ரத்தன் ரத்தன் டாடா, இந்தியாவில் பெரிய தொழிற் புரட்சிகளை ஏற்படுத்தி மிகப் பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கியவர். டாடா குழுமத்தின் வருமானத்தில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பல விஷயங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு, நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

மேலும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ரத்தன் டாடா, பல கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாணவர்களிடம் அறிவுரையும் ஆலோசனையும் வழங்கி வந்தார். இவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படும் இந்தத்தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.