Skip to main content

“போராடுபவர்கள் ஐம்பது ரூபாய்க்கு உண்டியல் குலுக்குகிறார்கள்”- சலசலப்பை கிளப்பிய சுப்பிரமணிய சிவா!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான மணிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சங்கத் தலைவன். இந்த படத்தை வெற்றிமாறன் தனது க்ராஸ்ரூட் கம்பெனி சார்பில் தயாரித்துள்ளார். எழுத்தாளர் பாரதிநாதன் எழுத்தில் உருவான தறியுடன் நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் ஹீரோவாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.
 

subramaniyan siva

 

 

மேலும் பிரபல தொகுப்பாளர் ரம்யா முதன்முறையாக ஹீரோயினாக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பல வருடங்கள் கழித்து கருணாஸ் நடித்திருக்கிறார். அறம் படத்தில் நடித்து பிரபலமடைந்த சுனுலட்சுமி நடித்திருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் சமுத்திரக்கனி, வெற்றிமாறன், ரம்யா, கருணாஸ், வெற்றிமாறன், சுப்பிரமணியன் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய இயக்குனரும் நடிகருமான சுப்பிரமணியன் சிவா, "கம்யூனிஸ கொள்கை என்பது சினிமாவில் வெற்றிபெற்றுவிடும், ஆனால் பொதுவாழ்க்கையில் அது வெற்றி பெறாது. அப்படி இருக்கையில் சினிமாவில் வெற்றிபெறக்கூடிய கொள்கையை நண்பர் மணிமாறன் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதன் முதலில் இந்தியாவில் தொழிற்சங்கத்தை நிறுவிய சிங்காரவேலருடைய குடும்பம் இன்று ஏழ்மையில் இருக்கிறது. ஆனால், அவர்களை நாம் திரும்பி பார்ப்பதில்லை. இந்த பொருளாதார வாழ்க்கையில் அவர் அவரை காப்பாற்றிக்கொள்வதே பெரிது என்ற கொள்கையை வைத்திருப்பதால், நமக்காக நம் சமூதாயத்திற்காக பாடுபட்டவர்களை பார்ப்பது கிடையாது. இனிமேலாவது நாம் அனைவரும் நன்றிக்கடனுடன் இருப்போம்” என்று பேசி முடித்தார்.

அவரை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் மணிமாறன் பேசினார். அப்போது,  “சினிமாவில் மூன்று மணிநேர போராட்டம் என்பது போலி போராட்டம். இதுவரை வரலாற்றில் நாம் அனைத்தையும் போராடிதான் பெற்றிருக்கிறோம். அதனால் அவருடைய கருத்தை மாற்றிக்கொள்வார் என்று நினைக்கிறேன்” என்றார்.

உடனடியாக அதற்கு பதிலடி தரும் வகையில் சுப்பிரமணியன் சிவா, “ இந்த கொள்கையை தொடங்கியது காரல் மார்க்ஸ். ஆனால், அவருடைய சாவிற்கே பத்து பேர் தான் போனார்கள். உலகத்திற்கே போராடக்கூடியவர்கள் அனைவரும் ஐம்பது ரூபாய்க்கும் நூறு ரூபாய்க்கும் உண்டியல் குலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். அந்நேரத்தில் சுப்பிரமணியன் சாமியின் பேச்சுக்கு கீழே சலசலப்பு ஏற்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திரைத்துறைக்கே நல்லது கிடையாது” - நயன்தாராவுக்கு ஆதரவு அளித்த வெற்றிமாறன்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Vetrimaran who supports Nayanthara for annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என்று கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“குறைகளோடும் தவறுகளோடும் தான் படம் எடுக்கிறோம்” - மனம் திறந்த வெற்றிமாறன்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
vetrimaaran speech in  CIFF

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர்த்தொழில், விக்ரம் சுகுமாரனின் ராவணக் கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது. விருது வாங்கிவிட்டு மேடையில் பேசிய வெற்றிமாறன், “எப்போதுமே இது மாதிரியான படங்கள் எடுக்கும்போது ஒரு பேலன்ஸ் இருக்கணும். சில இடங்களில் கதையில் சமரசம் பண்ணிப்போம். சில இடங்களில் ஜனரஞ்சகத்தன்மைக்காக சமரசம் செய்துகொள்வோம். என்னுடைய படங்களில் நிறைய சீன்களில் டப்பிங் சரியாக இருக்காது. ஆனால் எல்லா படங்களையுமே நிறைய குறைகளோடும் தவறுகளோடும் தான் எடுத்து முடிக்கிறோம். இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுகிறார்கள். அதே சமயம் கதையின் நோக்கம் படத்தின் குறைகளை மறக்கடிக்க செய்கிறது.  

இது மாதிரி கதையாடல்கள் சமூகத்தில் ஒரு மாற்றம் நிகழ்த்தும் என்ற நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்காகத்தான் இந்த அங்கீகாரம் என நினைக்கிறேன். அடுத்தடுத்து செய்யும் முயற்சிகளில் சமரசங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் சரியாக கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். விடுதலை மாதிரியான படத்திற்கு ஜனரஞ்சகமான ஆதரவும் திரைப்பட விழாக்களின் அங்கீகாரமும் பெரிய ஊக்கமளிக்கிறது. நோக்கம் பத்தி பேசும்போது அயோத்தி பத்தி பேச வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தொடர்புபடுத்தி கொள்ளக்கூடிய ஒன்று. கடந்த சில வருடங்களில் வந்த படங்களில் ஒரு நல்ல நோக்கத்தோடு வந்த படம். அந்த இயக்குநரின் நோக்கத்தை ஆதரித்த மொத்த படக்குழுவிற்கும் பாராட்டுக்கள்” என்றார்.