Skip to main content

”ப்ளூ சட்டை மாறனுக்கு ஃபோன் போட்டுத்தர சொன்னார் சிம்பு!” - சுரேஷ் காமாட்சி EXCLUSIVE பேட்டி!

Published on 02/01/2021 | Edited on 03/01/2021

 

suresh kamatchi

                                      

வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பில் சிம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் 'மாநாடு'. இவர் இதற்கு முன்னர் 'கங்காரு', 'மிக மிக அவசரம்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இதில் மிக மிக அவசரம் படத்தை இயக்கியதும் சுரேஷ் காமாட்சிதான். ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படமாக 'மாநாடு' இருப்பதால், இவரை நேரில் சந்தித்து அதனைப் பற்றிய தகவல்களையும், முக்கியமான அப்டேட்களையும் கேட்டு அறிந்தோம். அவர் நக்கீரனிடம் பகிர்ந்த எக்ஸ்க்லூசிவ் விஷயங்களைக் காணலாம்...

 

நீங்கள் தொடர்ந்து அரசியல், சமூகம் சார்ந்த வலிமையான கருத்துகளை வெளியிட்டு வருகிறீர்கள்.  நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து பின்வாங்கியது பற்றி உங்கள் கருத்து?

ஜனநாயக நாட்டில் ஒருவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர்களின் பொதுச் சுதந்திரம். அதை நாம் விமர்சிக்கத் தேவையில்லை. தமிழகத்தில் அவர் மக்களால் மதிக்கப்படுகிற மிகப்பெரிய நடிகர். ஆனால், அரசியலில் நுழைந்தவுடன் அவரைப்பற்றி பலரும் பல விமர்சனங்களைக் கூறலாம், அவரை சிலர் இயக்குகிறார்கள் எனவும் கூறலாம். ஆனால், முதலில் அது ரஜினியின் தனிப்பட்ட விஷயம். 'என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு என்னால் முடிந்தவரை ஏதாவது செய்தே ஆகவேண்டும். ஆனால், எனது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை' என வெளிப்படையாய் ஒருவர் கூறுகின்றார் என்றால் அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமே தவிர விமர்சிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் நாம் மனிதர்களே இல்லை.

 

ஆரம்பத்தில் இருந்தே ‘மாநாடு’ படம் சர்ச்சைகளிலேயே இருந்தது உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கியதா?

பொதுவாகவே நான் நடிகர் சிம்புவுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய நாளில் இருந்தே பலர் என்னைத் தொடர்புகொண்டு சில விஷயங்களை செய்யாதீர்கள் எனக் கூறினார்கள். ஆனால் நான் முடியாததை எல்லாம் முடித்துக் காட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அதற்குள் எனக்கும் சிம்புவுக்கும் பல மனஸ்தாபங்கள். அவர் நடிக்கமாட்டேன் என்று கூறியபோது கூட எனக்கு அவர் மீது ‘தம்பி’ என்கிற மரியாதை குறையாமல்தான் இருந்தேன். படம் கைவிடப்படுகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்ட அந்த சமயத்தில் கூட நானும் சிம்புவும் தினமும் ஃபோனில் பேசிக்கொண்டுதான் இருந்தோம். அவரிடம் பிடித்த ஒரு குணாதிசயம் என்னவென்றால், யாரையும் பழிவாங்குகிற எண்ணமோ, பின்னால் சென்று நம்மை விமர்சிப்பதையோ செய்யமாட்டார். உங்களுக்கு ஒரு விசயம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள். ‘அஅஅ’ படம் வெளியானபோது ‘சிம்புவ கூட்டி வர சொன்னா, ராஜ்கிரனை கூட்டி வந்திருக்காங்க’ என்று கடுமையாக விமர்சித்தவர் ப்ளூ சட்டை மாறன். என் தயாரிப்பில் அவர் படம் இயக்க முடிவான போது, அவரை முதன்முதலில் வாழ்த்தியது சிம்புதான். என்னிடம் ஃபோன் போடச் சொல்லி அவரிடம் பேசி வாழ்த்தினார். யாருக்காவது இந்த மனசு வருமா? அதுதான் சிம்பு. இப்படி ரெண்டு பேருக்கும் இருந்த பரஸ்பர அன்பும் மரியாதையும்தான் ‘மாநாடு’ மீண்டும் தொடங்கியது.

 

'மாநாடு' உங்களுக்கு முழு திருப்தியாக இருந்ததா?

தயாரிப்பாளர்கள் யாருமே அவர்கள் படத்தைக் குறையாகக் கூறமாட்டார்கள், அதைப்போன்றே நானும். ஆனால் மற்றவர்களைப் போல் மேடைமேடையாய் ஏறி படத்தை எடுத்துக்கூற எனக்குப் பிடிக்காது. அதைப்போன்று இந்தப் படத்தில் எனக்கு அமைந்த படக்குழுவைப் பார்த்ததும் முழு நம்பிக்கையும் திருப்தியும் ஏற்பட்டுவிட்டது. 'சிம்பு - வெங்கட் பிரபு' கூட்டணி ரசிகர்களிடையே பெரிதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனால், இது சிம்புவிற்கு சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல படமாக அமையும் என்று நம்புகிறேன்.

 

அரசியல் படமாக ‘மாநாட்டை’ பார்க்கலாமா?

ஜாதி, மதத்தை அரசியலுக்காக உபயோகிப்பதை, இப்போது நாம் தமிழ்நாட்டில் அதிகமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது மிகத் தவறான செயல் என நான் நினைக்கிறேன். இசுலாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சமயத்தில், ஒரு மதத்தை வைத்தோ அல்லது ஜாதியை வைத்தோ அரசியல் செய்வது என்பது, பிரிவை ஏற்படுத்துகிற வகையில் உள்ளது. இப்போது என் உடன்பிறந்த அண்ணன் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்து சென்றால் அவரை எனது அண்ணன் இல்லை எனக் கூற முடியுமா? அவருக்குப் பிடித்த ஒன்றை செய்கிறார். அதனால் அவரை தமிழ் இனத்தவர் இல்லை எனச் சொல்ல முடியாது. மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்பதே எங்களது எண்ணம் அதை தழுவிய படமே 'மாநாடு' .

 

 

cnc

 

 

 

ஆரம்பத்தில் இருந்தே சிம்பு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவைப் பற்றி?

கண்டிப்பாக, அது ஒரு முக்கியமான உத்வேகமாக எனக்கு எப்போதும் இருக்கிறது. காரணம், அவருடைய படத்தைப் பற்றிய ஒவ்வொரு தகவல்களையும், சிலர் சமூக வலைதளங்களில் கொண்டு சேர்க்கின்ற விதத்தைப் பார்த்து வியக்கிறேன். ஆனால், சில சமயங்களில் முகம் சுளிக்கின்ற வகையில் தேவையில்லாத கருத்துகளை வெளியிடுவதை முற்றிலுமாய் தவிர்க்க விரும்புகிறேன். சமூக ஊடகங்களில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அந்த ரசிகர்களை அவர்கள் சார்ந்து இருக்கும் நடிகர்களே வழிநடத்த வேண்டும் என நினைக்கிறேன். அதை மிக முக்கியமாகச் செய்ய வேண்டும். ஏனென்றால் ரசிகர்கள் இல்லையேல் எந்த நடிகர்களும் இல்லை என்பதே நிதர்சனம். ரசிகர்கள், சினிமாவிலேயே நேரத்தை செலவிடாமல் தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது அரசியல் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன். அரசியல் என்றாலே சாக்கடை என்று ஒதுக்காமல், அதிலும் நமது கடமை என எண்ணி தலையிட வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள். நடிகர்கள், தங்களது ரசிகர்களை சரியாக வழிநடத்துவதன் மூலம், ஒரு வேளை பிற்காலத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் பண்பட்ட தொண்டர்களாக ரசிகர்கள் அமைவார்கள்.

 

விமர்சனங்கள் படத்தின் வெற்றியைப் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?

பொதுவாகவே இன்றைய மீடியா உலகில் விமர்சனங்கள் கூறுவதை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், ஒரு நல்ல முறையில் விமர்சனங்களை வெளியிட்டால் அது ஆரோக்கியமாக இருக்கும் என்பது எல்லோரும் விரும்பும் உண்மை. அதைப் போன்று தற்போதைய சூழலில் பலரும் பல பிரபலங்களின் பொது வாழ்க்கையைப் பற்றி தவறாகப் பேசுவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நான் என் வேலையைச் சரியாகச் செய்யவில்லை எனக் குறை கூறினால் அது என் எதிர்காலத்திற்கு வளமாக இருக்கலாம். ஆனால், என் தனிப்பட்டவாழ்க்கை அது என்னைச் சார்ந்தது மட்டுமே, நிச்சயமாகப் பிறர் தலையிடக் கூடாத ஒன்று.

 

படத்தைப் பற்றிய முக்கிய அப்டேட்ஸ் ஏதும் இருக்கிறதா?

 

nkn


ஏற்கனவே படத்தைப் பற்றிய முழுத் தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தவிர்த்து வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. படத்தில் யுவனின் இசை மிகவும் அருமையாக அமைந்திருக்கிறது. அதற்கு நாம் சான்று அளிக்கவும் தேவையில்லை. பின்னர் புதுவருடமன்று படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட ஆசைப்பட்டேன். ஆனால், இன்னும் வேலைகள் முழுவதுமாய் முடியாத காரணத்தினால் அது முடியவில்லை. இருந்த போதிலும் இந்த மாதம் முழுவதும் ‘மாநாடு’ பற்றிய அப்டேட்ஸ் வரும் என எதிர்பார்க்கலாம். படத்தை ரம்ஜான் பெருநாள் அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாழாப்போன அரசியல் இப்படி பார்க்க வைத்துவிட்டதே” - கலங்கிய தயாரிப்பாளர்

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
producer suresh kamatchi about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அதில் ஒரு ரசிகர் விஜயகாந்த்திற்குத் தனது உறுப்புகளைத் தரத் தயாராக இருப்பதாக வெளிநாட்டிலிருந்து வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் திரைப் பிரபலங்களும் அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பினார்.

இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவரைப் பார்த்து அவரது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேடையில் நாற்காலியில் அமர்ந்த அவர் திடீரென்று சரிந்து விழப் பார்த்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பதறியடித்தபடி அவரைப் பிடித்து உட்கார வைத்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் சமூக வலைத்தளங்களில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து வேதனையடைந்தனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜயகாந்த் உடல் நலம் குறித்து எக்ஸ் தளத்தில் மனம் திறந்துள்ளார். அந்தப் பதிவில், “கேப்டன்... ஆரம்பத்துல எந்தக் கப்பல்ல கேப்டனா இருந்தாரு விஜயகாந்துன்னு கிண்டல் பண்ணவங்க... பின்னர்தான் புரிந்துகொண்டனர். அவர் சினிமாவில் சிதைந்து கிடந்த பல கப்பல்களை சரிசெய்தவர் என்று. அதன்பிறகு கிண்டலடித்த அதே வாய்கள் கேப்டன் கேப்டன் என வாயாரக் கூப்பிடத் தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவராக இருக்கும்போது அச்சங்கத்தை தலை தூக்கி நிறுத்தியவர் அவர். கலை நிகழ்ச்சியொன்றில் ரஜினி கமல் என நட்சத்திரப் பட்டாளங்களைக் கையாண்டு கடனையடைத்தவர். சொன்னதை செய்து காட்டுவதையே இலட்சியமாக வைத்திருந்தவர். 

நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில், வரிசையாக பேருந்துகள் அவர்களை ஏற்றிச் செல்ல வந்தபோது பல கலைஞர்கள் பஸ்ஸிலா? என தயங்கி நின்றபோது, ஒரு பேருந்திலிருந்து கையசைக்க ‘சூப்பர் ஸ்டாரே பேருந்தில்தான் போகிறாரா?  நாமும் ஏறிக்கொள்வோம்’ என பேருந்துகள் நிறைந்தன. இதன் பின்னால் விஜயகாந்தின் அதிபுத்திசாலித்தனமும் நிறைந்திருந்தது என சொல்லக் கேள்வி. எல்லா நடிகர்களும் பேருந்தில் ஏறந் தயங்குவார்கள் என அறிந்திருந்த விஜயகாந்த் சூப்பர் ஸ்டாரிடம், ‘நீங்க முதல்ல பேருந்தில் ஏறிட்டா அப்புறம் அனைவரும் ஏறிடுவாங்க’ என சொல்லியிருக்கிறார். ‘அதற்கென்ன ஏறிட்டாப் போச்சு’ என தனக்கேயுரிய பாணியில் சொன்னதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். 

தவிர, நடிகர் சங்கத்தில் ஒரு நடிகர் மீதோ, நடிகை மீதோ புகார் வந்தால் அழைத்து விசாரிப்பார். சம்பந்தப்பட்ட நடிகர் நடிகை மீது தவறு இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்திற்குச் சென்று மன்னிப்புக் கேட்டு சுமூகமாக அந்தப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அனுப்பி வைப்பார். நடிகர் நடிகைகள் மீது தவறில்லை என்றால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் நடிகர் சங்கம் வந்துதான் தீர்வு காண வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக நிற்பார். தன் உடன் பிறந்த சகோதரர்களாய் ஒவ்வொரு உறுப்பினரையும் மதித்தவர். நல்ல மனிதன் என அனைவரிடமும் பெயரெடுத்தவர். படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் சமமான, தரமான உணவு... யார் வந்தாலும் அடைக்கலம் என தன்னிகரற்ற மனிதராய் விளங்கியவர் கேப்டன். எல்லோரும் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க மறுத்தபோது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் எனவும், மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டவர். 

காவிரியில் நீர் தர கர்நாடகா மறுத்தபோது, அம்மாநிலத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்துவோம் என குரல் கொடுத்து நெய்வேலி போராட்டம் நடந்தது. அப்போது 5,000  நடிகர்களை ஒன்று திரட்டி போராடியவர். அரசியலுக்கு முழுக்க தகுதியான மனிதர்... தகுதியான நேரத்தில் களமிறங்கி அதில் தனது கணக்கை அட்டகாசமாகத் தொடங்கியவர் உடல் நலத்தை விட்டுவிட்டார். உடல் நலம் பேணாததற்கு அரசியலே மிக முக்கிய காரணமாகிவிட்டது. எனக்கெல்லாம் மாபெரும் நம்பிக்கை இருந்தது கேப்டன் பழையபடி சிங்கமாக கர்ஜிக்க வந்துவிடுவார் என்று. ஆனால் சமீபத்திய அவரது காணொளியைப் பார்த்தபோது கண்ணீர்தான் வந்தது. பாழாப்போன அரசியல் அவரை இப்படி நம்மை பார்க்க வைத்துவிட்டதே எனக் கலங்கிப் போனேன். 

தவிடு பொடியாக்கும் ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைப் போல இருந்தவரை வீல் சேரில் வைத்து அரசியல் செய்ய அழைத்து வந்தபோது நெஞ்சே உடைந்துவிட்டது. மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்?  என குமைந்து போனேன். இந்த சமூகத்தோடு, அரசியல் எதிரிகளோடு, தன் உடல் நலத்தோடு எவ்வளவோ போராடிவிட்டார்! இன்னுமா போராட வேண்டும்? தான் எந்நிலையிலிருந்தாலும் போராடிக் கொண்டே இருப்பது சரியல்ல. இப்போதுதான் தலைமை மாறிவிட்டதே... இனியேனும் அவரை வதைக்காமல் பாதுகாத்து வைப்போம். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமோடு நம்மோடிருக்கட்டும் என்பதே என் ஒரே ஆசை. கேப்டன் உங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பல கோடி பேரில் நானும் ஒருவன். நலமே சூழ்க உம்மை” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

"வன்மம் பிடித்த நாக்குகளுக்கு நாமும் இரையாக வேண்டாம்" - தயாரிப்பாளர் காட்டம்

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

suresh kamatchi about ar rahman concert issue

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் நேற்று முன்தினம் (10.09.2023) சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான ஒரு இசை நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 

 

இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தங்களது டிக்கெட் நகலை பகிரவும் எனவும் குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு "நானே பலி ஆடாக மாறுகிறேன்" எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சீனுராமசாமி உள்ளிட்ட பலரை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ் தள பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த பதிவில், "ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுகள் கேள்வி கேட்கப்பட வேண்டியவைதான். எப்போதும் தான் சார்ந்து நடக்கும் நிகழ்வுகளில் மிகக் கவனமாக இருப்பவர். இந்த முறை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நம்பி விட்டதில் ஏகப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

அவற்றிற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏ.ஆர். ரஹ்மானும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இருந்தும் சிலர் இந்த நிகழ்வை வைத்துக் கொண்டு வன்மத்தைக் கக்கத் தொடங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆஸ்கார் விருது விழா மேடையில் தமிழில் பேசி பெருமைப்படுத்திய மாபெரும் கலைஞனை இவ்வொரு நிகழ்வை வைத்து அசிங்கப்படுத்துவது மிக மிகத் தவறான செயல். இத்தனை வருட சாதனைகளை ஒருங்கிணைப்பாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு நிகழ்வால் இழந்துவிட்டதாகப் பேசுவது சரியானதல்ல. 

 

நிகழ்விற்குப் பொறுப்பேற்று சீர்செய்யும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளபோது மலிவான அரசியல் செய்யும் சிலரின் சந்தர்ப்பவாத பேச்சுக்கு நாமும் ஒத்து ஊதுவது கேவலமான நாகரீகமற்ற செயல். அவரது சாதனைகளைக் கூட விட்டுவிடுங்கள்... மனிதாபிமான செயல்களை எடுத்துக்கொண்டால் அவதூறு பேசும் நாக்குகள் சற்று கூசவே செய்யும். 2016 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி வழங்கினார். 2018ல் கேரள மக்கள் பாதிக்கப்பட்ட போது இசை நிகழ்ச்சி நடத்தி நிதி உதவி வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் நிறைய குடும்பங்களுக்கு உதவியுள்ளார். 

 

லைட் மேன் யூனியனுக்கு இசை நிகழ்ச்சி நடத்தித் தந்துள்ளார். ஒற்றை நிகழ்வால் சர்வதேச புகழ் கொண்ட ஒரு நாயகனை ஸ்கேமர் என அழைப்பது சரியான செயலா என சிந்தியுங்கள். நிகழ்ந்த தவறுகளை சரிசெய்ய நேரம் கொடுங்கள். அவராகவே முன்வந்து சரிசெய்யக் கூடியவர்தான். நம்மில் ஒருவரை நாம் தாங்கிப் பிடிக்க வேண்டிய நேரம் இது. வன்மம் பிடித்தவர்களின் நாக்குகளுக்கு நாமும் இரையாக வேண்டாம். மாபெரும் கலைஞனின் சிறு சறுக்கலுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை. அதேபோல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று மக்களின் பாதிப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் சரத்குமார், நான் ரஹ்மானை ஆதரிக்கிறேன் என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "வரிசையைப் பின்பற்றுவது மற்றும் போக்குவரத்து விதிகள் என்ற தங்கள் சொந்த ஒழுக்கத்தைத் தவிர வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. குற்றம் நடந்த உடனேயே குற்றவாளிகளைத் தண்டிக்க போதிய நடவடிக்கைகள் எங்களிடம் இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ஆதாரம் கிடைத்தவுடன் தண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் டிக்கெட் வழங்கும்போது உண்மையான ரசிகர் யார், மாறுவேடத்தில் இருக்கும் விலங்கு யார் என்று எங்களுக்குத் தெரியாது. இதுபோன்ற கொடுமைகளை பொது இடங்களில் பார்க்க நேரிடுவது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார்கள் பார்வையில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் முதல் குழப்பத்தை உருவாக்கிய ஒவ்வொரு நபரும் பொறுப்பேற்க வேண்டும். சாலை விதிகளை மீறும் ஒவ்வொரு நபரும் பொறுப்பேற்க வேண்டும். பல நாடுகளில் சில மில்லியன் மக்கள் கூட்ட நெரிசலோ குழப்பமோ இல்லாமல் கலந்து கொள்கிறார்கள். காத்திருக்கும் அளவுக்கு பொறுமையாக இருக்கும்போது இந்தியாவிலும் இது சாத்தியமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.