Advertisment

என்ன ட்ரை பண்றார் சிம்பு? 

"என்ன ட்ரை பண்ற ஜெஸ்ஸி...?" - இந்த வசனத்தை சிம்பு 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் தனது காதலியான ஜெஸ்ஸியிடம் பேசுவார். தன் மீது காதல் வந்துவிட்டபோதும், தன்னுடன் ஒரு முத்தத்தை பகிர்ந்துகொண்ட பின்னும் எதுவும் நடக்காதது போல நடந்துகொள்ளும், காதல் இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்தை உருவாக்கும் ஜெஸ்ஸி என்ற த்ரிஷாவிடம் கார்த்திக் என்ற சிம்பு பேசும் வசனம் இது.

Advertisment

simbu with seeman

இன்று காலை நடிகர் சிம்புவின் ஒரு வீடியோ வைரலாக பரவத் தொடங்கியது. அந்த வீடியோவில், 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் ரிலீஸாக இருக்கிறது. எனக்கு இருப்பது நான்கைந்து ரசிகர்கள்தானே பால் பாக்கெட்டில் எனக்கு அபிஷேகம் செய்யாதீர்கள், அண்டா அண்டாவாக பாலை ஊற்றி எனக்கு அபிஷேகம் செய்யுங்கள். ஊரெங்கும் கட்டவுட்கள் வையுங்கள்' என்று பேசியிருக்கிறார். இதனால் பலரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். ரசிகர்கள் அதிர்ச்சியடையவில்லை, பொதுவான பார்வையாளர்கள்தான் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு சிம்பு, 'என் படம் வெளி வர இருக்கிறது. அப்போது என் ரசிகர்கள் யாரும் கட்டவுட்கள், பாலபிஷேகம் செய்யக்கூடாது' என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விட்டு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசும்போது, "அண்ணாவுக்கு எம்ஜிஆர்போல எனக்கு சிம்பு" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். மேலும், "என்னுடைய கதைக்கு பல முன்னணி ஹீரோக்களை தேர்வு செய்தேன். ஆனால், அவர்கள் அனைவரும் என் கதையில் நடிக்க அஞ்சினார்கள். தற்போது என்னுடைய தம்பி சிம்பு , அந்தக் கதையில் நடிக்க சம்மதித்துள்ளார். என்னுடைய மூன்று படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். விரைவில் சீக்கிரம் என்னை வைத்து படம் எடுங்கள் அண்ணா என என்னிடம் சிம்பு சொல்லிக்கொண்டே இருக்கிறார்" என்று கூறினார். "நானும் தம்பியும் சேர்ந்து கொன்னு எடுக்கப் போறோம்" என்று சிலாகித்தார். சிம்புவை புகழ்ந்து பேசிய அதேமேடையில், நடிகர் விஜயை தான் சொல்லிய சொல்லின் பின் நிற்க தைரியமில்லாதவர் என்று விமர்சித்தார். சர்கார் பட பிரச்சனையில் விஜய் எடப்பாடி பழனிசாமிக்கு பயந்துவிட்டதாகக் கூறிய சீமான் சிம்புதான் சூப்பர் ஸ்டார் என்றும் கூறினார். இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் சிம்பு தன் வீட்டில் போராட்டம் நடத்தியபோது சீமான் சிம்புவை சந்தித்து வாழ்த்தினார். இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் பின் அவ்வப்போது வெளிவந்தன.

Advertisment

இது ஒருபுறமிருக்க கடந்த வாரத்தில் திராவிடர் கழகம் நடத்திய விழா ஒன்றில் சிம்பு கலந்துகொண்டு, 'நான் பொதுவெளியில் தைரியமாக பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் பெரியார்தான்' என்று அந்த மேடையில் பேசி அசத்தினார். பெரியார் குத்து என்ற பாடலை மதன் கார்க்கி எழுத, அந்தப் பாடலை பாடி, நடித்திருந்தார் சிம்பு. அதற்காக சிம்புவை கௌரவப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சியில்தான் இவ்வாறு பேசினார் சிம்பு.

simbu with veeramani

சிம்பு என் தம்பி என்று சொல்லும் சீமான், திராவிட கட்சிகளையும், திராவிட கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வருபவர். ஒரு கட்டத்தில் அது உச்சத்தைத் தொட்டு பெரியாரையும் விமர்சித்திருக்கிறார். அவர் சிம்புவை சிலாகித்து தன் தமிழ் தேசிய கொள்கைகளை திரையில் பேச சிம்பு துணைபுரிவார் என்று மகிழ்ந்திருக்க, சிம்பு இன்னொரு மேடையிலும் நிற்கிறார். கட்டவுட் பாலாபிஷேகத்துக்கு எதிராக வீடியோ வெளியிட்ட சிம்பு இன்று வேறு விதமான வீடியோ வெளியிட்டிருக்கிறார். முதலில் வெளியிட்ட வீடியோவை சிலர் கிண்டல் செய்ததாலேயே அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த வீடியோ என்று கூறப்படுகிறது. இடையில் சிம்புவுக்கு ஆண்மிக முகம் ஒன்றும் இருந்தது. அவர் இமயமலை சென்ற புகைப்படங்கள் வைரலாகின. திருவண்ணாமலையில் தனக்கு கிடைத்த ஞானம் பற்றியும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

சிம்பு எந்த மேடையில் பேசினாலும் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால், பொதுவான பார்வை கொண்டவர்களுக்கு இது குழப்பமான ஒன்றுதான்.

sundar c Simbu vantha raajavatha varuven
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe