திறமையில் குறையில்லாத இளம் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிலம்பரசன் (எ) சிம்பு (எ) STR. ஆனால், பல்வேறு சர்ச்சைகளால் சூழப்பட்டவர். படப்பிடிப்புகளுக்கு சரியாக வரவில்லை, நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டு அட்வான்ஸ் வாங்கிய படத்தில் நடிக்கவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். இயக்குனர் லிங்குசாமி, 'வேட்டை' படத்தில் நடிக்கதன்னிடம் சிம்பு வாங்கிய அட்வான்ஸ் ஒரு கோடி ரூபாய் இன்னும் திருப்பித் தரப்படவில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இப்படி, பல சர்ச்சைகளால் சிம்பு பாதிக்கப்பட்டுள்ளாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், அவர் மீது மாறாத அன்புடன் இன்னும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

barathiraja in manadu

Advertisment

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'மாநாடு' படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். முதல் அறிவிப்பு வந்து பல மாதங்களாக சிம்புவின் ஒத்துழைப்பின்மையால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லையென்றும் அதனால் சிம்புவுக்கு பதிலாக வேறு ஒருவர் இந்தப் படத்தில் நடிப்பாரென்றும் சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை கடும் ஏமாற்றம் அடையச்செய்தது.

Advertisment

SAC in manadu

வெங்கட் பிரபு இயக்கிய 'மங்காத்தா' திரைப்படம் நடிகர் அஜித்திற்கு மிகப்பெரிய மாஸ் வெற்றிப்படமாக அமைந்தது. அதுபோன்ற ஒரு படமாக இது அமையுமென்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களை இந்த செய்தி விரக்தியடையச்செய்தது. அதன் பிறகு சமாதான முயற்சிகள் நடப்பதாகவும் சிம்பு மீண்டும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வந்தன. கடந்த மாதம் சபரி மலைக்கு மாலை அணிந்து சென்று வந்தார் சிம்பு. பிறகு, சிம்பு நடிக்கிறார் என்ற செய்தி படக்குழுவினரால் உறுதி செய்யப்பட்டது. இந்த செய்திகளால் சற்றே மகிழ்ச்சியடைந்திருந்த சிம்பு ரசிகர்களை நேற்று வெளிவந்த அப்டேட்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளன.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்தும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் அப்டேட்களை வெளியிட்டார். இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மாநாடு', ஒரு அரசியல் படமென்பது அதன் இயக்குனர் வெங்கட் பிரபுவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் பாரதிராஜா, ஏற்கனவே 'ஆயுத எழுத்து' படத்தில் ஒரு அரசியல்வாதியாக நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர், தனுஷின் 'கொடி' படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார். இவர்கள் இருவரும் 'மாநாடு' படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய ராஜீவன் கலை இயக்கத்தை கையாள பிரவீன் கே எல் படத்தை தொகுக்கிறார். மீண்டும் முழுவீச்சில் 'மாநாடு' படத்தில் பங்கேற்பதன் மூலம் தன் ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளார் நடிகர் STR.