Advertisment

'நேர்கொண்ட பார்வை' ரசிகர்களுக்கு... 'பிங்க்' படம் ஒரு பார்வை!

அமிதாப் பச்சன், டாப்ஸி பன்னு, கிரித்தி குல்ஹரி, ஆன்ட்ரியா தாரங் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் வங்காள இயக்குனர் அனிருத்தா ராய் சௌத்திரி முதன் முதலாக பாலிவுட்டில் இயக்கி, சுஜீத் சிர்கார், ரித்தேஷ் ஷா மற்றும் அனிருத்தா எழுத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம்தான் ‘பிங்க்’. பல கோடி பேர் வாழும் இந்த இந்தியாவில், பல முன்னேற்றங்கள் அடைந்த இந்தியாவில், இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

Advertisment

pink

நகரத்தில் வாழும் மாடர்ன் பெண்களாக மூன்று பெண் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பதன் மூலம் இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு எப்படியெல்லாம் அநீதி நடைபெறுகிறது என்பதை த்ரில்லர் கேட்டகிரியில் சொல்லிய படம்தான் இது. இந்தப் படம் தொடங்கப்பட்ட உடனேயே கதைக்குள் சென்றுவிடுகிறது. மினல் - டாப்ஸி, ஃபலக்- க்ரித்தி குல்ஹரி, ஆன்ட்ரியா- ஆன்ட்ரியா தாரங் என்ற மூன்று பெண்கள். ராஜ்வீர் என்ற பணக்கார மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ள அந்த நபரின் அழைப்பை ஏற்று ஒரு இரவு பார்ட்டிக்கு சென்றிருப்பார்கள். அங்கு இவர்களுடன் ராஜ்வீரின் மேலும் இரண்டு நண்பர்கள் இணைந்துகொள்வார்கள். நிறைய மது அருந்திய பின் அவர்களுக்கு அந்த இரவு ஒரு மோசமான ஒரு இரவாக மாறத்தொடங்கும். ராஜ்வீரின் நண்பர்களில் ஒருவனான டம்பி, ஆன்ட்ரியாவை தவறாக சீண்டத் தொடங்குவான். ராஜ்வீர் மினலிடம் தவறாக நடக்க முயல்வான், மினலோ நோ நோ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதை மீறியும் ராஜ்வீர் தவறாக நடக்க முயலும்போது அருகே இருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து அவன் கண்ணில் ஓங்கி ஒரு அடி அடிப்பார் மினல். அதன்பின் ராஜ்வீருக்கு காயம் ஏற்பட, இந்த மூன்று பெண்களும் டாக்ஸி புக் செய்து அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டிற்கு செல்வார்கள்.

Advertisment

மூன்று பெண்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய மோசமான உணர்வை ஏற்படுத்திவிடும். பயத்துடனேயே அந்த இரவை எப்படியாவது கடத்த நினைப்பார்கள். மினல் அடுத்த நாள் காலையில் எழுந்து ஜாக்கிங்கு சென்றுவிடுவாள். அப்போதுதான் தீபக் செகல் (அமிதாப் பச்சன்) அவளை பார்ப்பார். அண்டை வீட்டாரான அவர் மினல் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை பார்த்தே தெரிந்துகொள்வார். அதன் பின் அவர்களுடைய நாட்கள் இதை சுற்றியே கழியும். மூன்று பெண்கள் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கு ராஜ்வீரின் நண்பர் போன் செய்து, ‘அந்த பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள். அவர்கள் மோசமான பெண்கள்’ என்று தெரிவிப்பார். அதனை அடுத்து அந்த வீட்டு உரிமையாளர் மூன்று பெண்கள் இருக்கும் வீட்டுக்கு திடீரென வந்து சாதாரணமாக ஏதேனும் உங்களுக்கு பிரச்சனையா என்று விசாரித்துவிட்டு கிளம்பிவிடுவார். இதனையடுத்து அந்த வீட்டு உரிமையாளரை ராஜ்வீர் நண்பர் ஆக்சிடெண்ட் செய்து பின்னர் ஆட்டோவில் ஏற்றிவிடும்போது அந்த பெண்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பு என்று மிரட்டுவான்.

இதன்பின் வீட்டு உரிமையாளர் ஃபலக் என்ற பெண்ணிடம் கூற, அவள் மினலுக்கு கால் செய்து இச்சம்பவத்தை தெரிவிப்பார். மினல் தெற்கு டெல்லி காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக புகாரளிக்க தன் நண்பருடன் செல்கையில் போலீஸ்காரர்கள் அந்த புகாரை ஏற்றுக்கொள்ளாமல் அந்த பெண்களை தவறாகப் பேசி அனுப்பிவிடுவார்கள். இதனையடுத்து மினல் தன்னுடைய மேலாளரிடம் இந்த சம்பவம் குறித்து பேசுவார். பாஸ் தனக்கு போலீஸில் தெரிந்த பெரிய அதிகாரியிடம் பேசி இந்த புகாரை பெற்றுக்கொள்ள செய்வார். இதற்கிடையில் ஃபலக் ராஜ்வீரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மன்னிப்புக் கேட்டு இப்பிரச்சனையை முடித்துக்கொள்ள ராஜ்வீரின் நண்பரிடம் பேசியிருப்பாள். ஆனால், அதுவும் பிரச்சனையில் முடிந்துவிடும்.

இப்படி இந்த பிரச்சனை இந்த இடத்திலிருந்து வேறு தளத்திற்கு மாறத் தொடங்குகிறது. ஃபலக் குறித்து தவறான போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் பரப்பி அவளுடைய வேலைக்கு ஆபத்தை உண்டாக்குவார்கள். மினலை கடத்தி மோசமான செயலால் மிரட்டுவார்கள். இப்படி அடுத்தடுத்த தொல்லைகள், அவர்களது பின்னணியால் காவல்துறையின் நடவடிக்கையின்மை என அந்த மூன்று பெண்களுக்கு வாழ்க்கை கடினமாகிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பெண்கள் மீதே கொலை முயற்சி வழக்கு வருகிறது. அமிதாப்பே அவர்களுக்காக வக்கீலாக வாதாடுவார். அவர், நீதிமன்றத்தில் வாதாடுவதை சில காலமாக நிறுத்தி வைத்திருந்த வழக்கறிஞர் ஆவார்.

pink

இதன்பின் ஒட்டுமொத்தமாக பெண்கள் குறித்து நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதை நமக்கு இந்த படம் சொல்கிறது. பொதுவாக பெண் ஒருசில தன்மைகளுடன் இருந்தால் மட்டுமே நல்லவள், மதிக்கத்தக்கவள், அவளிடம் தவறாக நடந்துகொள்ளக் கூடாது என்பதுபோல் நாம் நினைத்துகொண்டிருப்போம். ஆனால், இந்தப் படம் சொல்வது பெண் குடித்தாலும், திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக்கொண்டாலும் அவளுடைய சம்மதம் இன்றி நடப்பது தவறானது என்பதுதான். இந்தப் படம் கலாச்சாரத்தை தூக்கி பிடிக்கவில்லை, பெண்கள் தெய்வமாக பார்க்க வேண்டியவர்கள் என்று சொல்லுபவர்களால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தது. இப்படம் வெளியானபோது பல ஆணாதிக்க சிந்தனையாளர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால், அமிதாப் அந்த கோர்ட் சீன்களில் கேட்கும் அந்த பதிமூன்று கேள்விகளும் ஆணாதிக்க சிந்தனையாளர்களிடம் பெண்கள் குறித்து சிறிது நேரமாவது யோசிக்க வைக்கும். அதுதான் இந்தப் படத்தின் வெற்றி என்றும் கூட சொல்லலாம்.

இந்த படம் சொல்லவந்த கருத்தை சொல்ல ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, நடிகர்களின் நடிப்பு என்று அனைத்துமே உதவியிருக்கிறது. இப்படத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் ரியலிஸ்டிக்காக இருக்கும். நடிகர்களின் உணர்வை நமக்குக் கடத்த நிறைய க்ளோஸ் அப் ஷாட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இசைக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத மாதிரி இருந்தாலும் தேவையான இடங்களில் மட்டும் சாரல்போல இசை அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல சொல்ல வந்த கருத்தை நறுக்கென சில வசனங்களின் வழியே கடத்திவிடுவார்கள். முடிவில் அமிதாப் பச்சன் மினல்க்கு நியாயம் தேடிக் கொடுத்துவிடுவார். அதேபோல ஒரு பெண் 'வேண்டாம்' என்றால் அது 'வேண்டாம்' என்றுதான் அர்த்தம் என்பதை நமக்குப் புரியவும் வைத்திருப்பார்கள்.

nerkonda parvai pink
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe