ADVERTISEMENT

”கமலுக்கும் தெரியும்; ஆனால், அஜித்தான் நம்பர் ஒன்” - ’காலா’ பட பிரபலம் ஆர்.எஸ்.ராஜா பேட்டி

01:37 PM Jul 21, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மங்காத்தா, கபாலி, காலா உள்ளிட்ட பல படங்களில் ஸ்டில்ஸ் போட்டோகிராபராக பணியாற்றிய ஆர்.எஸ்.ராஜாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டதன் சிறு பகுதி பின்வருமாறு...

”18 வயதில் காதல் தோல்வியடைந்து ஊரில் சின்ன பிரச்சனை ஏற்பட்டதால் நீ ஊரில் இருக்க வேண்டாம் என்று கூறி என்னை சென்னைக்கு அனுப்பிவைத்தனர். சென்னை வந்த பிறகுதான் சினிமா என்று இவ்வளவு பெரிய மீடியா இருக்கிறது, அதற்கு பின்னால் நிறைய பேருடைய கடின உழைப்பு இருக்கிறது என்பதெல்லாம் தெரியவந்தது. மதுரையில் நான் நல்லா போட்டோ எடுப்பேன். அதனால் சினிமாவில் போட்டோகிராபர் ஆகலாம் என்று முடிவெடுத்து வாய்ப்பு தேடினேன். முதன்முதலில் ரமேஷ் என்பவரிடம் அசிஸ்டண்டாக சேர்ந்தேன். அதன் பிறகு சசி என்பவருடன் சில காலம் வேலை பார்த்தேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அசிஸ்டண்டாக வேலை பார்த்தேன். 2000ஆம் ஆண்டு பல்லவன் படத்தில் போட்டோகிராபராக பணியாற்ற முதல் வாய்ப்பு கிடைத்தது. பின், சென்னை 28 படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அங்குதான் இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்தேன். அந்த அறிமுகம் மூலம் அட்டக்கத்தி படத்திலிருந்து நட்சத்திரம் நகர்கிறது வரை அவருடைய எல்லா படங்களிலும் பணியாற்றியுள்ளேன்.

ஸ்டில்ஸ் போட்டோகிராபி என்பது எப்போதுமே ஸ்பாட்டில் கவனமாக இருக்க வேண்டிய வேலை. டயலாக்கை எப்படிச் சொல்வார்கள், சொல்லும்போது எப்போது கண்ணை மூடுவார்கள், எமோஜனல் ஆகும்போது அவர்கள் முகம் அந்த எமோசனையும் கேரி பண்ண வேண்டும், அதேநேரத்தில் அவர்கள் முகம் அழகாகவும் தெரியவேண்டும். இதையெல்லாம் பார்த்து பார்த்துத்தான் ஸ்டில்ஸ் எடுக்க வேண்டும். அதற்கு நடிகர்களை ரொம்பவும் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கும். இப்போது மொபைல் வந்துவிட்ட பிறகு நாம் எடுத்த புகைப்படத்தை, ஃபர்ஸ்ட் லுக்கை ஈசியாக பார்க்க முடிகிறது. அந்தக் காலத்தில் அப்படி இல்லை, எங்காவது கட் அவுட் வைத்திருப்பார்கள். அங்குதான் பார்க்க முடியும். மவுண்ட் ரோட்டில் எப்போதும் கட் அவுட் வைப்பார்கள். அது பக்கத்தில் சென்று நின்றுவிடுவேன். மக்கள் நாம் எடுத்த புகைப்படத்தை எப்படி ரசிக்கிறார்கள், பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதையெல்லாம் பார்க்கும்போது ரொம்பவும் சந்தோசமாக இருக்கும்.

மங்காத்தா படத்தில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை நான்தான் போட்டோ எடுத்தேன். அஜித் சாரின் சில படங்களில் நான் அசிஸ்டண்டாக வேலை பார்த்ததால் அவருடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அவருக்கும் போட்டோகிராபி பற்றி நிறைய தெரியும் என்பதால் நம்முடைய எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார். கேமரா, லென்ஸ் பற்றி என்னிடம் நிறைய பேசியிருக்கிறார். சில சமயங்களில் என்னுடைய கேமராவை வாங்கி செட்டில் இருக்கும் யாரையாவது புகைப்படம் எடுப்பார். செட்டில் ரொம்பவும் கூலாக இருப்பார். எல்லோருக்கும் சமமாக மரியாதை கொடுத்து பேசுவார். தமிழ் சினிமாவில் போட்டோகிராபி பற்றி அதிகம் தெரிந்தவர் என்றால் அஜித் சார்தான். கமல் சாருக்கும் நிறைய தெரியும். ஆனால், அஜித் சார் கையில் கேமராவை வைத்துக்கொண்டு லைவ்-வில் எடுத்துக் கொடுப்பார். அவர் என்னை எடுத்த போட்டோவை வீட்டில் வைத்திருக்கிறேன்”. இவ்வாறு ஆர்.எஸ்.ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT