/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/446_11.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா திருமண வாழ்க்கை ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் ஆவணப்படமாக வருகிற 18ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனும் - நயன்தாராவும் பேசும் வீடியோ மூன்று வினாடி இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ட்ரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த மூன்று வினாடி வீடியோவிற்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டிஸ் அனுப்பினார். இதனை நயன்தாரா தனது அறிக்கையின் மூலம் தெரிவித்து, “தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாக இருக்கிறது.நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 3 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. 'நானும் ரௌடிதான்' படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும். பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்புரிமை காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன” என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த செயல் கீழ் தனமானது என்றும் மேடைகளில் பேசுவது போல் உங்களால் நடந்து கொள்ள முடியாது என்றும் தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்ப, தற்போது இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் நயன்தாராவின் அறிக்கையை மேற்கோள் காட்டி, விக்னேஷ் சிவனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/448_13.jpg)
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நயன்தாராவுக்கு வணக்கம். மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள். LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம். என் கதைக்கும் அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பைத் தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், 'உன்னால் என்ன பண்ண முடியும்' என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும். அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள்.
உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரதோடு நடந்துக் கொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும். இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது. எந்தப் படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதி யோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்பூலகதிற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். படத்தின் பூஜை கடந்த டிசம்பரில் போடப்பட்டு பணிகள் ஆரம்பித்தது. ஆனால் இந்த தலைப்பு என்னுடையது என்று கூறி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். பின்பு எல்.ஐ.சி நிறுவனம், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி பட நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து சில மாதங்கள் கழித்து படத்தின் தலைப்பு எல்.ஐ.கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - Love Insurance Kompany) என மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)