தேசிய விருது வாங்கிய ஸ்ரீகாந்த் தேவா

Srikanth Deva got National award

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான தேசியத்திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழ்க் கலைஞர்கள் மற்றும் தமிழ்ப் படங்கள் என்று பார்க்கையில், சிறந்த தமிழ்த்திரைப்படம் என்ற பிரிவில் கடைசி விவசாயி வென்றுள்ளது. மேலும் அப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற 'மாயவா சாயவா...' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டது.

அதைத் தவிர்த்து திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும் சிறந்த கல்வித் திரைப்படம் என்ற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த படம் என்ற பிரிவில் மாதவன் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி' படத்திற்கும் ஸ்பெஷல் ஜுரி விருதுஇந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஷெர்ஷா' படத்திற்கும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் 69வது தேசியத்திரைப்பட விருது வழங்கும் விழா விக்யான் பவனில் நடைபெற்று வருகிறது. மத்தியத்தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருதுக்குத்தேர்வான கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் குடியரசுத்தலைவரிடமிருந்து ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருது வாங்கினார். அருகில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடனிருந்தார்.

national award
இதையும் படியுங்கள்
Subscribe