படவாய்ப்பிற்காக பெண்களைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாகக் கூறி தமிழ், தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும், படவாய்ப்பு ஆசை காட்டி தன்னைப் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்ட நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் பெயர்களைப் பொது வெளியில் கூறினார். சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் பெயர்களும்அதில்இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பல்வேறு விவாதங்களையும் கிளப்பியது. அதன்பிறகு, சென்னையில் குடியேறி படவாய்ப்பு தேடிவந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.
இந்த நிலையில், ஸ்ரீரெட்டி நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக ஸ்ரீரெட்டி நடிக்க உள்ளார். இத்தகவலை நடிகை ஸ்ரீரெட்டி, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.