Skip to main content

அரைநிர்வாண போராட்டத்தால் அடுத்தடுத்த பிரச்சனைகள்... 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி புலம்பல்!  

Published on 10/04/2018 | Edited on 11/04/2018
sri reddy


'சுச்சி லீக்ஸ்' போல் தெலுங்கில் ‘ஸ்ரீ லீக்ஸ்’ என்ற பெயரில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பட வாய்ப்பு கேட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நாசம் செய்த பிரபலங்களின் பெயர்களையும் வெளியிடப்போவதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி 'ஸ்ரீ லீக்ஸ்' வாயிலாக அறிவித்திருந்தார். பின்னர் சில நாட்களுக்கு முன் நயன்தாரா நடித்த ‘நீ எங்கே என் அன்பே’ பட இயக்குனர் சேகர் கம்முலு பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். நடிகைகளிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்றுகிறார் என்று ‘ஸ்ரீ லீக்ஸ்’ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சேகர் கம்முலு இதை மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரித்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை வழங்க மறுத்ததை கண்டித்து ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் எதிரில் ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இது பட உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். 
 

இந்நிலையில் ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து தெலுங்கு நடிகர் சங்கத்தில் காரசாரமாக விவாதம் நடத்தப்பட்டது. அப்போது தெலுங்கு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "நடிகை ஸ்ரீரெட்டி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு நடிகர் சங்கம் வழங்கிய அங்கீகார அட்டையை ரத்து செய்துள்ளோம். அவருடன் எங்கள் சங்கத்தை சேர்ந்த எந்த கலைஞரும் இனிமேல் நடிக்க மாட்டார்கள். தடையை மீறி யாரேனும் நடித்தால் அவர்களும் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நடிகர் தேஜா இது குறித்து பேசுகையில்... "உறுப்பினர் அட்டை வழங்குவது நீண்டகால பணி. ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டில் உண்மை இல்லை. எங்களை அவர் மிரட்ட முடியாது" என்றார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சங்கம் நடவடிக்கையால் ஸ்ரீரெட்டி சினிமாவில் நடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. மேலும் குடியிருந்த வீட்டின் உரிமையாளரும் தன்னிடம் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளதாக ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்